பல மொழிகளை கற்பதால் வேலை வாய்ப்பு திறன் வளரும் காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பேச்சு
சின்னாளபட்டி: பல்வேறு மொழிகளை கற்று தேர்ச்சி பெறுவதன் மூலம் வேலை வாய்ப்பு திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள முடியும் என, காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேசினார்.காந்திகிராம பல்கலையில் இந்திய மொழிகள் மற்றும் கிராமிய கலைகள் புலம் சார்பில், சமஸ்கிருத ஒப்பியல் ஆய்வு, கற்றல் மையங்கள் துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'பல்கலைகளில் சமஸ்கிருதம் தொடர்பான மையங்கள் முதன் முதலாக இங்கு துவங்கப்படுவது வரவேற்பிற்குரியது. சமஸ்கிருதம் தொன்மையான, செவ்வியல் மொழி. செம்மொழியான தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்பு உடையது.ஏராளமான சமஸ்கிருத நூல்கள் தமிழிலும், தமிழ் நூல்கள் சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பண்பாடுகள், பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இரு மொழிகளும் நமக்கு கண்கள் போன்றவை.இந்திய மொழிகள் பலவும், இப்பல்கலையில் கற்றுத் தருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், பல்வேறு மொழிகளை கற்று தேர்ச்சி பெறுவதன் மூலம் வேலை வாய்ப்பு திறனை வளர்த்துக் கொள்ள முடியும்' என்றார்.பேராசிரியர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பேராசிரியர் முத்தையா விழா நோக்கம் குறித்து விளக்கினார். சமஸ்கிருத பாரதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், சமஸ்கிருத மொழியின் பரவலாக்கம் கற்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.பேராசிரியர்கள் சலீம் பெய்க், கந்தாரே சந்து லக்ஷ்மன், கேசவராஜராஜன் உள்ளிட்டோர் பேசினர்.