பெற்றோர் - ஆசிரியர் கழகம் காஞ்சிபுரம் மண்டல மாநாடு உதயநிதி பங்கேற்பு
சென்னை: பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், பெற்றோரை கொண்டாடுவோம் காஞ்சிபுரம் மண்டல மாநாடு, படப்பையை அடுத்த கரசங்காலில் நடந்தது.இதில், அமைச்சர் உதயநிதி பங்கேற்று பேசியதாவது:மாநாட்டில் பங்கேற்றதோடு, பள்ளிகளின் வளர்ச்சிக்கு 668 கோடி ரூபாய்க்கு நன்கொடை வழங்கியுள்ளீர்கள். தமிழகம் முழுதும் இதுவரை 2,500 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது.கல்வி வளர்ச்சியை, அரசு மட்டுமே செய்துவிட முடியாது. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்போர் என, அனைவரும் கைகோர்த்து செயல்பட்டால் தான், வளர்ச்சியை அடைய முடியும்.நம்மை உருவாக்கும் பள்ளிகளுக்கு, நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விளையாட்டுத் துறையைவிட, பள்ளிக்கல்வித் துறைக்கு முதல்வர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி விளையாடவும் அனுமதிக்க வேண்டும். விளையாடும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கும்; நன்றாகவும் படிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த, 35,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பள்ளி சீரமைப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 446 ஊர்ப்புற நுாலகர்களுக்கு பணி உயர்வு ஆணை வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியோர் கவுரவிக்கப்பட்டனர்.35,000 பிளாஸ்டிக் பைகள் வினியோகம்தமிழகத்தில் பிளாஸ்டிக் பை, பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த மாநாட்டில், 35,000 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு இருக்கையிலும், நான்-ஓவன் பேக் எனும் நெய்யப்படாத பிளாஸ்டிக் பையை வைத்து, அதில், தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பிஸ்கட் பாக்கெட் ஆகியவற்றை வைத்திருந்தனர். அரசு தடை செய்த பைகளில் இந்த வகையும் ஒன்று என்பதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.