மதிப்பெண்ணிற்காக படிக்காதீர்கள்.. பாடத்தை நன்கு புரிந்து படிக்க வேண்டும்: ஆடிட்டர் சேகர் அட்வைஸ்
புதுச்சேரி: சி.ஏ., சி.எம்.ஏ., உள்ளிட்ட படிப்புகளை படிப்பது மிகவும் எளிதானது என, ஆடிட்டர் சேகர் பேசினார்.புதுச்சேரியில் நேற்று துவங்கிய தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:வாழ்க்கையில், பெற்றோர், ஆசிரியர், இறைவன் ஆகியோரை முதலில் மதித்து வணங்க வேண்டும். இதை செய்யாதவர்கள், வாழ்க்கையில், மிகப்பெரிய உயரத்தை தொட முடியாது. பொதுவாக, அனைத்து படிப்புகளுமே சிறந்த படிப்புகள் தான். அதை நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.வாழ்க்கையில் அதிக பணத்தை மட்டுமல்ல, நல்ல புகழை கொடுப்பதும் சிறந்த படிப்பு தான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையை, மற்றவர்கள் சொல்வதற்காக தேர்வு செய்யாதீர்கள். அது உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.சி.ஏ., சி.எம்.ஏ., மற்றும் ஏ.சி.எஸ்., ஆகிய மூன்று படிப்புகளுமே, நிதியை அடிப்படையாக கொண்டவை. இந்த படிப்புகளை படிப்பது மிகவும் சிரமம் என்ற எண்ணம், பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால், அப்படி எதுவும் கிடையாது.இன்றைய சூழலில், சி.ஏ., முடித்தவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலயே, மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐ.ஏ.எஸ் படித்து முடித்தவர்களுக்கு, ஆரம்பத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட இது அதிகம்.அதேபோல, மதிப்பெண்ணிற்காக ஒரு போதும் படிக்காதீர்கள். பாடங்களை நன்றாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று படித்தவர்களே, மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கின்றனர். இது, தகவல் தொழில் நுட்ப உலகமாக மாறி விட்டது. அதனால், நீங்கள் புதிது புதிதாக படிக்க வேண்டும்.அதேபோல, எந்த செயலை செய்தாலும், அதை 100 சதவீத உழைப்போடும், அர்ப்பணிப்போடும் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் நிச்சயம் வெற்றி பெற்று விடுவீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.