திருத்தணி மலை கோவில் நிர்வாக பயிற்சி பள்ளி கட்டட பணி தாமதம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ், கோவில் தலைமை அலுவலகம் பின்புறத்தில், 10,000 சதுரடியில், 16.50 கோடி ரூபாயில், மூன்றடுக்கு கொண்ட நிர்வாக பயிற்சி பள்ளிக்கு, கடந்த ஏப்., 6ல் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.பின், பயிற்சி பள்ளி கட்டடத்திற்கு பில்லர்கள் அமைப்பதற்கு இரும்பு கம்பிகள் நிற்க வைத்தும், அடித்தளம் அமைப்பதற்கு பள்ளமும் தோண்டப்பட்டது. கடந்த ஒன்றரை மாதமாக பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த வாரம் பணிகள் துவங்குவதற்கு ஒப்பந்ததாரர் முயன்ற போது, திருத்தணி நகரில் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வந்ததால், பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், பணிகள் துவங்குவதில் மேலும் தாமதம் ஆவதால், குறித்த காலத்தில் பயிற்சி பள்ளி கட்டட பயணியை முடித்து, பயன்பாட்டிற்கு விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து திருத்தணி கோவில் அதிகாரி கூறியதாவது:கோவில் நிர்வாக பயிற்சி பள்ளி கட்டடம் வடிவமைப்பு வரைபடம் வருவதில் தாமதம் ஆனதால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பணிகள் துவங்க சென்ற போது, பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால், பணிகளை உடனே தொடர முடியவில்லை. மேலும், மின் மோட்டார் வாயிலாக பள்ளத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி பணிகள் உடனடியாக துவக்கப்படும். அடுத்தாண்டு ஜூன் - ஜூலை மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடிந்து, பயிற்சி பள்ளி பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.