என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியல் தடை கோரிய வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: உயர்கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எப்.,தரவரிசை பட்டியல் வெளியிட தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி செல்லமுத்து தாக்கல் செய்த பொதுநல மனு:தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.,) மூலம் இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.கற்பித்தல், மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல் அடிப்படையில் தரவரிசை அளிக்க வேண்டும்.இதை சரியாக பின்பற்றாத கல்லுாரிகளுக்கு தரவரிசையில் முதலிடம் அளிக்கப்படுகிறது. வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதில்லை. முறைகேடு நடக்கிறது. மாணவர்கள் சரியான கல்லுாரியை தேர்வு செய்ய முடியவில்லை. 2025க்கு என்.ஐ.ஆர்.எப்.,தரவரிசை பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான ஒப்புதல், மதிப்பெண், வருமானவரித்துறை தணிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தபின் என்.ஐ.ஆர்.எப்.,தரவரிசை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.மத்திய அரசு தரப்பு, அறிவியல் பூர்வமாக விதிமுறைகளை பின்பற்றி நிபுணர்கள் மூலம் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது, என பதில் மனு தாக்கல் செய்தது.நீதிபதிகள்: மனுதாரர் எவ்வித புள்ளி விபரங்களை தாக்கல் செய்யவில்லை. பட்டியல் வெளியான பின் ஆட்சேபனை இருந்தால் மனு தாக்கல் செய்யலாம். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.