இ-காமர்ஸ், பின்டெக், என்டர்பிரைஸ் டெக் ஸ்டார்ட்அப் துறையில் கலக்குகிறது கோவை
கோவை: ஸ்டார்ட்அப் வளர்ச்சியில், சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய 'ஹப்' ஆக உருவெடுத்து வரும் கோவை, இ--காமர்ஸ், பின்டெக், என்டர்பிரைஸ் டெக் துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.சமீபத்தில் கோவையில் நடந்த, உலகப் புத்தொழில் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, சென்னையில் அதிகபட்சமாக 4,331 ஸ்டார்ட்அப்கள் உள்ளன. கோவை 1,592 ஸ்டார்ட்அப்களுடன் மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.முதலீடு ஈர்ப்பு கோவையில் 2016 முதல் 2025 வரை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 3.7 கோடி அமெரிக்க டாலர் நிதியை முதலீடாக ஈர்த்துள்ளன. மிட்சுபிஸி, ஐபிவி, வென்சர் கேட்டலிஸ்ட்ஸ், லீடு இன்வெஸ்ட், நேட்டிவ் லீடு போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள், கோவை ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளன.'இ-காமர்ஸ்', நிதி சார்ந்த ஸ்டார்ட்அப்களான 'பின்டெக்' மென்பொருளை, ஒரு சேவையாக (சாஸ்) வழங்கும், 'என்டர்பிரைஸ் டெக்' ஆகிய ஸ்டார்ட்அப்கள், கோவையில் அதிகம் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. ஆம்பியர், ஜூஸி கெமிஸ்ட்ரி, சூப்பர் கிளஸ்டர், ஆக்ரவ் நோட்டபிள் ஆகிய ஸ்டார்ட்அப்கள் கோவையில் குறிப்பிடத்தக்க ஸ்டார்ட்அப்களாக உள்ளன.காரணம் என்ன? தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட்அப் ஹப் ஆக, கோவை வளர்வதற்கு, நீண்ட தொழில் பாரம்பரியம் மிக்க நகர் என்பது முக்கிய காரணம். இன்ஜி., கல்லூரிகள், பட்டதாரிகளின் எண்ணிக்கையும் மற்றொரு காரணம்.திறன் மிக்க மனிதவளத்தோடு, குறைந்த செலவில் உற்பத்தி என்பது அதுவும் பெங்களூரு, ஹைதராபாத், சென்னையை விட மிகக் குறைவு என்பது கோவையின் சிறப்பம்சம். இவற்றோடு சிறந்த உள்கட்டமைப்பு, வலுவான விநியோகச் சங்கிலியும் காரணங்கள்.போர்ஜ் ஆக்ஸிலரேட்டர், வேளாண் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள ஐ.இ.டி.பி., அக்ரி ஹப், ஏ.ஐசி., ரெய்ஸ், கொடிசியாவின் சி.டி.ஐ. ஐ.சி., அடல் இன்குபேஷன்., பிஎஸ்ஜி ஸ்டெப் போன்ற தொழில்வளர் மையங்கள் (இன்குபேஷன் சென்டர்) கோவையின் தொழில்வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன.நடப்பு நிதியாண்டின் இறுதியில், கோவையில் உள்ள பதிவு பெற்ற ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2,500 ஐ எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.