கழிப்பறை சேதம் - திறந்தவெளியை நாடும் அங்கன்வாடி குழந்தைகள்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட அங்கன்வாடி கழிப்பறை சேதத்தால், முட்செடிகள் வைத்து அடைக்கபட்டுள்ளது. திறந்தவெளியை நாடும் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுலோசனா தெரிவித்தார். முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும்,பி.டி.ஓ., குருநாதன் முன்னிலையிலும் நடந்தது. ஒன்றிய பொறியாளர் அருண்பிரசாத் வரவேற்றார். கூட்டத்தில் விவாதம் சுலோச்சனா (குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒன்றிய அலுவலர்): மொ. கடம்பன்குளத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர் முறையாக பணிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோவிந்தராஜ்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,டேங்கர்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சுலோச்சனா: கிராம பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மர்ம நபர்கள் கதவு கழிப்பறை கோப்பைகளை சேதபடுத்துவதால், கழிப்பறை வளாகத்தை முள்செடிகளை கொண்டு அடைத்து வைத்துள்ளோம். இதனால் குழந்தைகள் திறந்த வெளி கழிப்பறைகளை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். குருநாதன் (பி.டி.ஓ.,): மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, டேங்கர் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.