மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்கும் கல்வி அவசியம்: மேயர் வலியுறுத்தல்
மதுரை: வகுப்பறைகளில் மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை போக்கும் கல்வி அவசியம் என மேயர் இந்திராணி பொன்வசந்த் வலியுறுத்தினார்.மதுரை மாநகராட்சி, செல்லமுத்து அறக்கட்டளை, எச்.சி.எல்., பவுண்டேஷன் சார்பில் ஹேப்பி ஸ்கூல் துவக்க விழா நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேயர் பேசியதாவது: இன்றைய அவசர வாழ்க்கை சூழலில் இயற்கையை துறந்து நவீனத்தை ஏற்று வாழ்கிறோம். பொது இடங்களில் மக்கள் நெருக்கம், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு, வேலைப்பளுவால் மக்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, கோபமாக மாறுகிறது.இந்தச் சூழலை மாற்றி அமைக்கும் இடமாக வகுப்பறைகள் இருக்க வேண்டும். வகுப்பறையில் கற்பிக்கும் கல்வி சமூகத்தில் எத்தகைய சவால்களையும் சந்திக்கக்கூடிய தன்னம்பிக்கையை உருவாக்கித்தர வேண்டும். அது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது.எனவே, ஆசிரியர்களுக்கு சமூக பொறுப்பு, கடமை அதிகம் உள்ளது என்றார். மண்டலத்தலைவர் வாசுகி, கல்வி அலுவலர் மாரிமுத்து, அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ராஜகுமாரி, எச்.சி.எல்., பவுண்டேஷன் நிறுவன உதவி மேலாளர் பிரபாகர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.