கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை அதிரடி கைது
ஆந்திரஹள்ளி:பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தொடர்பாக, ஆந்திரஹள்ளி தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி தேவம்மாவை போலீசார் கைது செய்தனர். பெங்களூரின் ஆந்திரஹள்ளியில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் கெமிக்கல் பாட்டில், பிளீச்சிங் பவுடர் போட்டு, கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ துணுக்கு, சமூக வலைதளத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் உட்பட, பலரும் கண்டித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தல் எழுந்தது. சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாணவர்களின் பெற்றோர், பொது மக்கள் பள்ளி முன் குவிந்து போராட்டம் நடத்தினர். பல நாட்களாகவே கழிப்பறையை சுத்தம் செய்ய, மாணவர்களை பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது தான் எங்களுக்கு தெரிந்தது என, பெற்றோர் வருந்துகின்றனர். அதன்பின் விழித்துக் கொண்ட, மாநில அரசு, ஆந்திரஹள்ளி தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி தேவம்மாவை, பணியிடை நீக்கம் செய்து நேற்று முன் தினம் உத்தரவிட்டது. கல்வித்துறை அதிகாரிகளின் தகவலின்படி, பேடரஹள்ளி போலீசார், லட்சுமி தேவம்மாவை நேற்று கைது செய்தனர்.