உள்ளூர் செய்திகள்

லேப்டாப் விடுபட்ட மாணவர்களுக்கு... பணம்; கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைப்பு

புதுச்சேரி: விடுபட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்பிற்கு பதிலாக பணமாக தரபள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2015ம் ஆண்டு முதல்வராக இருந்த ரங்கசாமி லேப்டாப் திட்டத்தை முதல் முதலில் அறிவித்தார். அந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இலவச லேப்டாப் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து 20 கோடி ரூபாய் செலவில் 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.அதன்பிறகு, நிதி நெருக்கடி மற்றும் ஆட்சி மாற்றத்தாலும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 23ம் தேதி மீண்டும் துவங்கப்பட்டது.2023-24 கல்வியாண்டில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புப் பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.68 கோடியில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. இந்த லேப்டாப் மத்திய அரசின் போர்ட்டலில் இருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.லேப்டாப்பில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் இடம் பெற்றிருந்தது. இந்த லேப்டாப்பை மாணவர்கள் தினசரி பள்ளிக்கு கொண்டுவர வேண்டும் என பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியது.இருப்பினும், 2022-23 ஆண்டு பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. விடுப்பட்ட இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இம்மாணவர்களுக்கு, லேப்டாப்பிற்கு பதிலாக பணமாக வழங்கிட, தற்போது புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான கோப்பு பள்ளி கல்வித் துறை வாயிலாக கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கவர்னரின் அனுமதி கிடைத்ததும் 8 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பிற்கு பதில், பணமாக அவர்களு வங்கி கணக்கில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகின்றது. எனவே இத்தொகை விடுபட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்