உள்ளூர் செய்திகள்

போதை பொருள் புழக்கம் தமிழகத்தை பாதிக்கிறது: ரவி

சென்னை: தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் வெளியில் இருந்து வருவது கிடையாது; அவை இங்கேயே தயாரிக்கப்படுகின்றன என கவர்னர் ரவி பேசினார்.போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.அதில், கவர்னர் ரவி பேசியதாவது:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, 60 நபர்கள் இறந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. போதைப் பொருள் நம் சமூகத்தையே அழித்து விடும். அதன் தாக்கம் மிகக் கொடுமையானது. உடலளவிலும், மனதளவிலும் அது நம்மை கீழே தள்ளி விடும். இதனால் ஏகப்பட்ட தற்கொலைகள் நடக்கின்றன.போதைப் பொருட்கள், முக்கியமாக நம் இளைஞர்களை குறி வைக்கின்றன. நம் வருங்காலத்தையும் போதைப் பொருட்கள் அழித்து விடுகிறது. 1980களில் மிக மதிக்கப்பட்ட மாநிலமாக பஞ்சாப் திகழ்ந்தது. அங்கு விவசாயமும் செழிப்பாக இருந்தது. அங்குள்ளவர்கள் ராணுவத்திலும் அதிகமாக சேர்ந்தனர்.இப்போது விவாசாயம், நிறுவனங்கள் அழிந்து விட்டன. அடுத்த 20 ஆண்டுகளில் போதை கலாசாரம் அவர்களை என்ன செய்து விட்டது என்பதை, நாம் பார்த்து வருகிறோம். என்னிடம் நிறைய பெற்றோர், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை, பள்ளி, கல்லுாரிகளில் ஏற்படுத்த கேட்டுக் கொண்டனர்.கஞ்சாவுக்கு இன்று பலர் அடிமையாகி உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் தற்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கண்டறிந்து, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நாம் அனைவரும் போதைப் பழக்கத்திற்கு எதிராக இருக்க வேண்டும்.தமிழகம் கல்வி, மருத்துவத்தில் சிறந்து விளங்கி வருகிறது. கடந்தாண்டு செங்கல்பட்டு, விழுப்புரத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்தனர். தற்போதும் அதுபோலவே நடந்துள்ளது.கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.தமிழகத்தை போதைப் பொருட்கள் பெரிய அளவில் பாதிக்கின்றன. தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் வெளியில் இருந்து வருவது கிடையாது; அவை இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. நாம் தான் போதைப் பொருட்களுக்கு எதிராக போரட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்