நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வு சி.இ.ஓ.,க்களுக்கு சிறப்பு கூட்டம்
சென்னை: பள்ளிக்கல்வி நிர்வாகம் தொடர்பாக குவிந்து கிடக்கும் வழக்குகள் மற்றும் நிர்வாக பிரச்னைகளுக்கு தீர்வு காண, இன்று முதல் மூன்று நாட்களுக்கு சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சென்னையில் கூட்டம் நடக்கிறது.தமிழக பள்ளிக்கல்வியில், இந்த ஆண்டு இறுதிக்குள் வழக்குகள் மற்றும் நிர்வாக பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 15 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியின் நிர்வாகம் சார்ந்து, 8,000க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளன. ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை, கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்குதல், அகவிலைப்படி முரண்பாடு, ஊதிய முரண்பாடு, பணியிடை நீக்கம், தனியார் பள்ளி அங்கீகாரம், கல்வி கட்டண பிரச்னை என, பல்வேறு பிரச்னைகள் உள்ளன.இந்த பிரச்னைகளுக்கு முடிவு காண, மாவட்ட, மாநில வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.க்களுக்கு, இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், செயலர் காகர்லா உஷா, இயக்குனர் அறிவொளி மற்றும் அதிகாரிகள், கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதில், தங்களின் மடிக்கணினிகளுடன் பங்கேற்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.