ஆயுஷ் மருந்து தரப்பரிசோதனை ஆய்வகம் அமைக்க... வலியுறுத்தல்
சமீபத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் தரமற்றவை என புகார் எழுந்து, தற்போது அனைத்து இருமல் மருந்துகளும், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இரண்டு ஆய்வகங்களின் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் அலோபதி மருந்து மாத்திரைகளை பரிசோதிக்க சென்னையில் மட்டுமே ஆய்வகம் உள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன் அலோபதி மருந்துகளுக்கான மண்டல ஆய்வகம் ஒன்று ரூ.20 கோடியில் மதுரையில் துவக்கப்பட்டது. ஆனால் போதிய அலுவலர்கள் நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் சமீபகாலமாக அலோபதி அல்லாத மருத்துவ முறைகள் குறிப்பாக சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவம் பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட மருந்து மாத்திரைகள், சூரணங்கள், லேகியங்கள், வலி நிவாரண தைலங்கள் முதலியவற்றை சாம்பிள் எடுத்து தரப் பரிசோதனை செய்யப்படுவதே இல்லை.இதற்கு என, தனியாக ஆய்வகம் மாநிலத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ளது.மாவட்டந்தோறும் உள்ள இந்திய மருத்துவ நடைமுறைகளுக்கான ட்ரக் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் சென்னைக்கு அனுப்ப வேண்டி உள்ளது. அவர்களும் பெயருக்கு அனுப்பி வருகின்றனர்.இந்திய மருந்துகளில் போலிகள் உலா வருவதை தடுக்க மதுரையில் மண்டல அளவிலான இந்திய மருத்துவ ஆய்வகம் ஒன்றை அமைக்க ஆயுஷ் அமைச்சகம் முன்வர வேண்டும் என, இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.