வேலையை விட்டு விவசாயத்தில் அசத்தும் சிவில் இன்ஜினியர்
பாகல்கோட்: விவசாயம் செய்யுறவங்களுக்கு என்ன வருமானம் கிடைக்க போகுது. பெரிய கம்பெனியில வேலை பார்த்து, கை நிறைய சம்பளம் வாங்குற ஆண்களுக்கு தான், பெண் கொடுப்போம் என்று சொல்வதை நாம் பார்த்து இருப்போம்.ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் கூட, வேலையை உதறிவிட்டு, விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்து உள்ளனர். அவர்களில் ஒருவரை பற்றிய விபரம் வருமாறு:பாகல்கோட்டின் ஹுனகுண்டா தொண்டிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன், 48. சிவில் இன்ஜினியராக இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயத்தில் ஈடுபடுவதற்காக திடீரென வேலையை ராஜினாமா செய்தார்.அதன்பின்னர் 5 ஏக்கரில் விவசாய நிலம் வாங்கினார். அதில் ஒரு ஏக்கரில் கிரீன்ராயல் ரகத்தைச் சேர்ந்த 500 கொய்யா கன்றுகளை வாங்கி நட்டார். இவற்றுக்கு தண்ணீர் பாய்ச்ச, நிலத்தில் ஆழ்துளை கிணறும் அமைத்தார். தற்போது அந்த கொய்யா மரங்கள் நன்கு வளர்ந்து, பழங்கள் காய்த்துள்ளன. அந்த பழங்களை அறுவடை செய்து, வருமானம் ஈட்டுகிறார்.இதுகுறித்து விவசாயி மல்லிகார்ஜுன் கூறுகையில்:சிறுவயதில் இருந்தே, விவசாயத்தில் ஈடுபட ஆசை இருந்தது. ஆனால் பெற்றோரின் ஆசையால், இன்ஜினியரிங் படித்தேன். நல்ல நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயத்தில் ஈடுபட மீண்டும் ஆசை வந்தது. இதுகுறித்து குடும்பத்தினரிடம் கூறியபோது, எனது ஆசைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். வேலையை ராஜினாமா செய்து விட்டு, விவசாயத்தில் அடியெடுத்து வைத்தேன்.ஒரு ஏக்கர் தோட்டத்தில், கொய்யா செடிகள் நட்டேன். கடந்த ஆண்டு 1 லட்சம் ரூபாய், லாபம் கிடைத்தது. ஒரு பழத்தின் எடை 400 கிராம் முதல் 500 கிராம் வரை இருக்கிறது. அனைத்து கொய்யா பழங்களும் நன்கு கனிந்தால், ஆண்டுக்கு 4 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். துவக்கத்தில் அதிக லாபம் எதிர்பார்ப்பது தவறு. கொய்யா மர செடிகளை பிள்ளைகள் போல, பராமரித்து வளர்க்க வேண்டும். விவசாயத்திற்கு மண் வளங்களை சரிபார்த்து, தகுந்த பயிரை தேர்வு செய்ய வேண்டும்.என் நிலத்திற்கு கொய்யா செடிகள், நன்கு வளரும் என்று தெரிந்ததால், கொய்யா செடிகளை நட்டு வளர்த்தேன். விவசாயத்தில் இன்னும் நிறைய சாதிக்க ஆசை உள்ளது. விவசாயம் செய்வது சுயசார்பு தொழில். யாருடைய கையையும் எதிர்பார்க்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.