போட்டி தேர்வுகளுக்கு தயாராக அழைக்கிறது அறிவுசார் மையம்
கோவை: கோவையில் இப்படி ஒரு நுாலகமா...! என ஆச்சரியப்படுகின்றனர் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்.கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள ஆடிஸ் வீதியில், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அறிவு சார் மையத்தில், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், செமினார் ஹால் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் அமர்ந்து படிக்கும் வாசிப்பறைகள் என, பல நவீன வசதிகள் உள்ளன.குறிப்பாக, சிவில் சர்வீசஸ், டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே மற்றும் வங்கி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் நீட், ஜேஇஇ, கேட், டான்செட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் படிக்கும் மாணவர்களுக்கு, இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.மாணவர்கள் அமர்ந்து படிக்க காற்றோட்டம் உள்ள விஸ்தாரமான அறைகள், சொகுசான மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. இன்டர்நெட் இணைப்புடன், 20க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் உள்ளன. தேவைப்படும் வாசகர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.அனைத்து போட்டித்தேர்வுக்கும் தேவையான ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் உள்ளன. வினா விடை பயிற்சி புத்தகங்களும் உள்ளன. தற்போது, 2800 நுால்கள் வந்துள்ளன. இன்னும் 20 ஆயிரம் புத்தகங்கள் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். தேவை என்றால் சொந்த புத்தகங்களை எடுத்துசென்றும் படிக்கலாம்.நுாலகர் ஸ்டீபன் கூறுகையில், ஆரம்பத்தில் 50 பேர் வந்தனர். இப்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போட்டி தேர்வுக்கு படிப்பவர்களை மட்டும்தான் அனுமதிக்கிறோம். கதை, கட்டுரை போன்ற பொது நுால்கள் இல்லை. அதனால் மற்ற வாசகர்கள் வந்து பயனில்லை. போட்டித்தேர்வுக்கான நுால்கள், இன்னும் நிறைய வர உள்ளது என்றார்.சரியாக பயன்படுத்தினால் தேர்வில் வெற்றி பெறலாம்வங்கி தேர்வுக்கு படிக்கும் யஷ்வந்த் என்ற இளைஞர் கூறுகையில் இப்படி ஒரு அரசு நுாலகமா என, ஆச்சரியமாக உள்ளது. எந்த குறையும் சொல்ல முடியாது. எனக்கு வீட்டில் இருந்தபடி போட்டித் தேர்வுக்கு படிக்க வசதி இல்லை. கோச்சிங் கிளாஸில் சேர பணமில்லை. இந்த நுாலகம் மிகுந்த உதவியாக உள்ளது. போட்டித்தேர்வுக்கு படிப்பவர்கள், இந்த நுாலகத்தை சரியாக பயன்படுத்தினால், கண்டிப்பாக வெற்றி பெறலாம்.எங்களில் பலர் தொலைவில் இருந்து வருவதால், மதிய உணவு கொண்டு வந்து விடுகிறோம். அமர்ந்து சாப்பிட, தனியறை ஏற்படுத்திக்கொடுத்தால் நல்லது. இப்போது, இங்குள்ள ஹாலிலேயே தரையில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்றார்.போட்டித்தேர்வு எப்படி?போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு, செய்தித்தாள்கள் அவசியம் தேவை. ஆனால் இந்த நுாலகத்தில், செய்தித்தாள்கள் வாங்குதில்லை. இது பெரிய குறையாக உள்ளது. அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ள, செய்தி பத்திரிகைகள் வேண்டும் என, போட்டித்தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.