சைபர் தீவிரவாதம் தடுக்க மேலாண்மை திட்டம்
சென்னை: சைபர் தீவிரவாதத்தை தடுக்கும் வகையில், அனைத்து பல்கலைகளிலும், சைபர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.உலகம் முழுதும் டிஜிட்டல் தொழில் நுட்பம் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. கல்வி, வணிகம், மேலாண்மை உட்பட பல்வேறு துறை பணிகள் அனைத்தும், ஆன்லைன் வழிக்கு மாறியுள்ளன. இதனால், இணையதள சேவை அதிகரித்துள்ளது.இந்நிலையில், டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு சவால் விடும் வகையில், சைபர் தொழில்நுட்ப பிரச்னைகளும், சைபர் தீவிரவாத அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, பல்கலைகளும், கல்லுாரிகளும் முன்னேற்பாடு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. நாளை, சைபர் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்க வேண்டும் என பல்கலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அன்றைய நாளில், சைபர் தீவிரவாதம், சைபர் தாக்குதல், ஆன்லைன் ஹேக்கிங் போன்றவை குறித்து, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்; மேலும், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், சைபர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.