உள்ளூர் செய்திகள்

பள்ளி சிறுவர், சிறுமியருக்கு கோடைக்கால கலை பயிற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களுக்கு, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், கோடைக்கால கலை பயிற்சி முகாம் இன்று (6ம் தேதி) துவங்குகிறது.இது குறித்து, சேலம் மண்டல உதவி இயக்குனர் சங்கரராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:சிறுவர்களின் கலை ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், இளம் வயதிலேயே கலை ஆர்வம் மிக்கவர்களை ஊக்குவிக்கவும், தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையில் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக சிறுவர், சிறுமியருக்கு பகுதிநேர கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றத்தில் கோடைக்கால கலைப்பயிற்சிகள் வரும், 6ம் தேதி (இன்று) துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது.தினமும் காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை, குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், யோகா ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், 5 வயது முதல், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் முகாமில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற சந்தாவாக, 200 ரூபாய் மட்டும் செலுத்தப்பட வேண்டும். பயிற்சி நிறைவு நாளன்று மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை, 99433 51775 அல்லது 0427 2386197 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்