ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு பதிவு துவக்கம்
சென்னை: தேர்தல் பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், நேற்று தங்களின் தபால் ஓட்டை பதிவு செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் வரும், 6ம் தேதி நடக்கிறது. ஆசிரியர்கள், ஓட்டு சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுதும் நடந்தது.அவர்களில் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்தோருக்கு, நேற்று ஓட்டுகளை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் ஆணைய அனுமதியுடன் சில இடங்களில், பெட்டிகள் வைக்கப்பட்டு, தபால் ஓட்டுகள் பெறப்பட்டன. இதற்கிடையில், 50 சதவீத ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுகள் வரவில்லை என, பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களுக்கு, தேர்தலுக்கு முந்தைய நாள் நடக்கும் வகுப்பில், தபால் ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.