ஸ்பான்சர்ஷிப் உதவியுடன் வெளிநாடுகளில் படிப்பு
மதுரை: மதுரையைச் சேர்ந்த 9 -12ம் வகுப்பு மாணவர்கள் ஸ்பான்சர்ஷிப் உதவியுடன் வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்பை அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி வழங்குவதாக அதன் இயக்குநர் அபிலாஷ் கூறினார்.அவர் கூறியதாவது: ஏ.எப்.எஸ்., (அமெரிக்கன் பீல்டு சர்வீஸ்) என்ற சர்வதேச, தன்னார்வ அமைப்பின் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு செலவின்றி வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்பப்படுகிறார்கள். முழு நேர, பகுதிநேர ஸ்பான்சர்ஷிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 9 - 12ம் வகுப்பு மாணவர்கள் இதில் சேரலாம். சர்வதேச விழிப்புணர்வு, கலாசார ஆர்வம், மொழி ஆளுமை உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இதனால் அவர்களின் திறன், தன்னம்பிக்கை வளரும். இப்படிப்புகளின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக நாங்கள் உள்ளோம். விருப்பமுள்ள பள்ளிகள் இத்திட்டத்தில் சேரலாம். அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறலாம் என்றார்.ஏ.எப்.எஸ்., திட்டத்தில் படித்த இப்பள்ளி மாணவி அன்ஷிகா 17, கூறுகையில், வானியலாளராக ஆசை. அமெரிக்காவில் பிளஸ் 1 படித்தேன். அந்நாட்டின் கலாசாரத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டேன். அங்கு பாகுபாடின்றி அனைவரையும் சமமாக பார்ப்பார்கள் என்றார்.ஜப்பான் மாணவர் ஹிபிகி 18, கூறுகையில், நான் இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன். இங்கு வந்த ஓராண்டில் தமிழ் பேச கற்றுக்கொண்டேன். மதுரையின் கலாசாரம் மிகவும் பிடித்துள்ளது. இந்திய கலாசாரத்தில் ஆழமான குடும்ப பந்தத்தை உணர முடிந்தது என்றார்.பள்ளி முதல்வர் ஞானசுந்தரி, பி.ஆர்.ஓ., முத்துகணேஷ் உடனிருந்தனர்.