வருமா தேவகோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி!
தேவகோட்டை: தேவகோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து படிக்க கிராமங்களை நோக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.தேவகோட்டை நகரில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் படிக்கின்றனர். இங்குள்ள ஐந்து மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் 60 முதல் 70 சதவிகிதம் வரை தான் பிளஸ் 1 சேர்க்கப படுகின்றனர். அதுவும் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தான் இடம் கிடைக்கிறது.ஐந்து பள்ளிகளில் இரண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மட்டும் சுயநிதியில் இயங்குகின்றன. 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி தான் படிக்க வேண்டிய நிலை. இங்குள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நிலை அதை விட மோசம்.நகராட்சி பள்ளியில் ஏழை மாணவர்கள் தான் படிக்கின்றனர்.தொடர்ந்து சில ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் நுாறு சதவிகிதம் தேர்ச்சி பெறுகின்றனர்.மேல்நிலைப் பள்ளிகளில் குறைவான மதிப்பெண் எடுப்பவர்கள், நகராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 சேர வேண்டுமென்றால் இடம் கிடைப்பதில்லை, எங்கள் பள்ளியில் படித்தவருக்கே இடம் இல்லை என்கின்றனர். பிளஸ் 1 சேர விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்குவதில்லை. சேர்க்கப்படும் மாணவருக்கே விண்ணப்பம் வழங்கப்படுகின்றன.விண்ணப்பத்தை பெற்று கொண்டு இடம் கிடைக்கவில்லை என்றால் எந்த வில்லங்கமும் செய்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக விண்ணப்பம் வழங்கப்படுவதில்லை.நகரில் உள்ள பள்ளிகளில் படித்து விட்டு இடம் கிடைக்காததால் அருகில் உள்ள கிராமங்களான அனுமந்தக்குடி, பெரியகாரை அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலை உள்ளது.இந்த தொகுதியில் பல ஆண்டுகளாக எம்.பி. யாக இருந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தேவகோட்டை நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லை என்பது வெட்க கேடானது என்று சில மாதங்களுக்கு முன் ஆதங்கப்பட்டார். இந்தாண்டாவது நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தாண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் எந்த அறிவிப்பும் அரசிடமிருந்து வரவில்லை.பள்ளி ஆசிரியர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் கூறி அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறுகிறார்கள். பிளஸ் 1 வகுப்பு ஆரம்பித்தால் அதிகளவு மாணவர்கள் சேரும் நிலை உருவாகும். நகராட்சி உயர்நிலைப் பள்ளியை பொறுத்தவரை நகரில் இருப்பதால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து செயல்பாடுகளும் நடைமுறை படுத்தப்படுகிறது. கூடுதல் மதிப்பெண் எடுக்கிறார்கள். நகரில் அனைத்து வசதிகளுடன் படித்து விட்டு தமிழகத்திலேயே உயர்கல்விக்காக கிராமத்தை நோக்கி செல்லும் நிலை தேவகோட்டை மாணவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த அவல நிலையை போக்க விரைவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.