மறக்கப்பட்ட மறைமலையடிகள்: வேதனையில் தமிழ் ஆர்வலர்கள்
நாகப்பட்டினம்: தமிழ் மொழியில் பிற மொழிகள் கலக்காத வகையில், தமிழ் வார்த்தைகளை உருவாக்கி, தமிழர்கள் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று தனித்தமிழ் இயக்கம் கண்டவர் மறைமலை அடிகள். ஆன்மிகம், பத்திரிகையாளர், தமிழ் ஆசிரியர் என, பன்முகத்தன்மை கொண்ட அவர், தனி தமிழின் தந்தை என அழைக்கப்படுகிறார்.நாகையில், 1876ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றிய சொக்கநாதப்பிள்ளை, சின்னம்மாள் தம்பதியினருக்கு பிறந்தார். இன்றும் மறைமலை அடிகள் பிறந்த நாகை, காடம்பாடியில் அவரது தந்தை சொக்கநாதர் பெயரில் தெரு உள்ளது.கடந்த 1950ம் ஆண்டு செப்., 15ல் மறைந்த மறைமலை அடிகள் நினைவை போற்றும் வகையில், நாகை, தமிழ் சங்கம் சார்பில் 1969ம் ஆண்டு, ரயில்வே ஸ்டேஷன் முன் மறைமலை அடிகளுக்கு சிலை அமைக்கப்பட்டது.குன்றக்குடி அடிகளார் தலைமையில் 1969ம் ஆண்டு ஜூன், 19ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். மறைமலை அடிகளுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், அக்கரைப்பேட்டை புதிய ரயில்வே மேம்பால பணிக்காக, நகராட்சி சார்பில் சிலை அகற்றப்பட்டு, வெளிப்பாளையம், தம்பித்துரை பூங்காவின் ஓர் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் வைக்கப்பட்ட சிலை, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து சேதமாகி வருகிறது.திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் மறைமலை அடிகள். அவரது சிலை பாதிப்படைவதற்கு முன், நகரின் மையப்பகுதியில் மணி மண்டபத்துடன் கூடிய மேடையில் அமைக்க வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.