டேட்டா சயின்ஸ் படிக்க விருப்பமா?
தற்போது டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலைவாய்ப்புகள் பெருகிவரும் சூழலில் அவை தொடர்பான பட்டப் படிப்புகளை சென்னை ஐ.ஐ.டி., ஆன்லைனில் வழங்கி வருகிறது. இப்படிப்புகளில் சேர பிளஸ் -2 முடித்தால் போதும். வயது வரம்பு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.கல்லுாரியில் படித்துக்கொண்டே இந்த ஆன்லைன் படிப்பையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்.டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு பிஎஸ்புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற ஆன்லைன் பட்டப் படிப்பையும்,கடந்த ஆண்டு பி.எஸ்., எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆன்லைன் படிப்பையும் ஐ.ஐ.டி., அறிமுகப்படுத்தியது.வழக்கமாக ஐ.ஐ.டி.,யில் பட்டப் படிப்புகளில் சேர வேண்டுமானால் ஜெ.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். ஆனால், இந்த இரு ஆன்லைன் படிப்புகளுக்கான சேர்க்கை அவ்வாறு இல்லாமல் அடிப்படை தகுதித்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. இதற்காக மாணவர்களுக்கு 4 வாரம் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும்.டேட்டா சயின்ஸ் படிப்புக்கு ஆங்கிலம், கணிதம், புள்ளியியல், கணக்கு சிந்தனை தொடர்பான பாடங்களும், அதேபோல், எலெக்டிரானிக் சிஸ்டம் படிப்புக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், சர்க்யூட், சி புரோகிராமிங் தொடர்பான பாடங்களும் இடம்பெறும். 4 வாரப் பயிற்சியின் முடிவில் தகுதித்தேர்வு நடத்தப்படும். அதில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெறுவோர் ஆன்லைன் படிப்பில் சேரலாம்.நான்கு ஆண்டுக் காலம் கொண்ட இந்த ஆன்லைன் படிப்பு, பவுண்டேஷன், டிப்ளமா, பிஎஸ்சி பட்டம், பிஎஸ் பட்டம் என 4 நிலைகளைக் கொண்டது. வகுப்புகள் ஆன்லைன் வழியில் நடைபெறும். பதிவுசெய்யப்பட்ட வீடியோ வகுப்புகளையும் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம். மேலும்,ஆன்லைன் வழியில் நேரடி வகுப்புகளும் (லைவ் கிளாஸ்) இருக்கும்.எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஐ.ஐ.டி., ஆன்லைன் படிப்புகளும், ஐ.ஐ.டி., நேரடி படிப்புகளுக்கு இணையானவை. அவை அரசு, தனியார் வேலைவாய்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.பி.எஸ்., புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்பு தொடர்பான தகவல்களை https://onlinedegree.iitm.ac.in. என்ற இணையதளத்திலும், அதேபோல், பி.எஸ்., எலக்ட்ரானிக் சிஸ்டம் படிப்பு தொடர்பான விவரங்களை https://study.iitm.ac.in/es/ என்ற இணையதளத்திலும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.