உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 50 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் எட்டு வாக்குறுதிகளும் அறிவிப்பு

பெங்களூரு: அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, 50 லட்சமாக உயர்த்தும் முயற்சியாக, கர்நாடக மாநில அரசு தற்போது எட்டு கல்வி உத்தரவாதங்களை அளித்துள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை, 50 லட்சமாக உயர்த்த கல்வித்துறை இலக்காகக் கொண்டுள்ளது. 'நாட்டிலேயே சிறந்த அரசு பள்ளி முறையை உருவாக்குவதே எங்களது ஐந்து ஆண்டுகால தொலைநோக்குப் பார்வை.இந்த மாற்றத்திற்கான பயணத்தில் இணையுமாறு, பெற்றோர்களையும், மாணவர்களையும் அழைக்கிறேன்' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.அத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள வாக்குறுதிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:5ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் மற்றும் 6ம் வகுப்பு முதல் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர் நியமனம் செய்யப்படுவர்.அனைத்து அரசு பள்ளிகளிலும் விருப்பத்தின் அடிப்படையில், ஆங்கில வழி கல்வி கொண்டு வரப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.கர்நாடக பொதுப்பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக்கு வந்து செல்ல இலவச பஸ் அல்லது போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும்.அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மாணவர்களுக்கு டிஜிட்டல் கற்றல் வசதி ஏற்படுத்தப்படும்.மாணவர்களின் பன்முக திறனை வளர்க்க ஓவியம், இசை மற்றும் விளையாட்டு துறைக்கு என, தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த ஏதுவாக, பள்ளியின் நிர்வாக மற்றும் இதர பணிகளுக்கு தனி பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.6ம் வகுப்பு முதல் திறன் வழிக்கல்வி மற்றும் போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பாட அடிப்படையிலான மதிப்பீட்டு முறை மூலம் ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றமும் கண்காணிக்கப்படும்.குழந்தைகளின் கற்றல் தரத்தை ஒவ்வொரு பாடவாரியாக கண்காணித்தல் மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயப் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு வாக்குறுதிகள் வழங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்