மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் திருடர்கள்
விழுப்புரம்: அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வார்டுகளில் நோயாளிகளிடம் பொருட்களையும், வெளியே பொதுமக்கள் விடும் வாகனங்களும் திருடு போவதைத் தடுக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் திணறுகிறது.விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இம்மருத்துவமனையில் தற்போது 1,227 படுக்கை வசதிகள் உள்ளது. மருத்துவமனை துவங்கியபோது பத்மாவதி செக்யூரிட்டி சர்வீஸ் என்ற தனியார் நிறுவனம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது 38 காவலாளிகள் பணி நியமனம் செய்யப்பட்டு சுழற்றி முறையில் வார்டுகளில் காவல் பணியில் ஈடுபட்டனர். தற்போது, வேறு ஒரு தனியார் நிறுவனத்திற்கு பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.மருத்துவமனையில் வார்டுகள், கட்டடங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் மட்டுமே காவலாளிகள் உள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பில் முற்றிலும் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், வார்டுகளில் இரவு நேரங்களில் நோயாளிகளுடன் அவர்களின் உதவியாளர்கள் தங்கியிருக்கும் போது அவர்களிடமிருந்து மொபைல்போன், நகை, பணம் போன்றவைகளை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். மருத்துவமனை உபகரணங்களும் திருடு போகிறது. குறிப்பாக மகப்பேறு மருத்துவமனை வார்டுகளில் அதிகளவில் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. இதுமட்டுமின்றி, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் பைக்குகளும் திருடு போகின்றன.மருத்துவமனையில் திருடுபோவது குறித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் திணறி வருகின்றனர். வார்டுகளில் இரவு நேரங்களில் காவலர்களை கூடுதலாக நியமித்தும், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைத்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மருத்துவமனையில் நோயாளிகளிடம் திருடு போவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசாரை நியமிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.