பொது பாடத்திட்டத்தை கைவிட்ட கல்லுாரிகள்
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், தங்கள் பகுதியில் உள்ள அரசு பல்கலைகளின் இணைப்பு அந்தஸ்து பெற்று, செயல்படுகின்றன. அவற்றில், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், தாங்களே பாடத்திட்டம் வகுத்து, அதனை பின்பற்றுகின்றன. மற்ற கல்லுாரிகள், சம்பந்தப்பட்ட பல்கலைகள் வழங்கும் பாடத்திட்டத்தின்படி, பாடம் நடத்துகின்றன.இந்நிலையில், தமிழக உயர்கல்வி மன்றம் சார்பில், உயர்கல்விக்கான பொது பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயார் செய்யப்பட்டது. இந்த பாடத்திட்டத்தையே அனைத்து பல்கலைகளும், அனைத்து கல்லுாரிகளும் பின்பற்ற வேண்டுமென, நடப்பு கல்வி ஆண்டின் துவக்கத்தில் அரசு அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்புக்கு, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில், கடும் எதிர்ப்பு எழுந்தது.பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., வழங்கிய தன்னாட்சி அதிகாரத்தின்படி, பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என, பல்கலைகளுக்கு, தமிழக கவர்னரும் கடிதம் எழுதினார். இதையடுத்து, தன்னாட்சி கல்லுாரிகள் மட்டும் பொது பாடத்திட்டத்தை பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளித்து, அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தன்னாட்சி கல்லுாரிகள் மட்டுமின்றி, மற்ற கல்லுாரி, பல்கலைகளும், பொது பாடத்திட்டத்தை பின்பற்றாமல் கைவிட்டது, உயர்கல்வி துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.பெரும்பாலான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஏற்கனவே அமலில் உள்ள பாடத்திட்டத்தின்படியே, பாடங்களும் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதனால், பொது பாடத்திட்டத்தை உருவாக்கிய தமிழக உயர்கல்வி மன்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் கல்வி ஆண்டிலாவது தன்னாட்சி அல்லாத கல்லுாரிகள் தங்கள் பாடத்திட்டத்தை, பின்பற்ற வேண்டும் என பல்கலைகளிடம் உயர்கல்வி மன்றம் ஆலோசித்து வருவதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.