தனித்துவமாக சிந்திப்போர் அனிமேஷனில் சாதிக்கலாம்
கோவை: தனித்துவமாக சிந்திக்கும் திறன் இருந்தால், அனிமேஷன் துறையில், வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என, மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மீடியா அனிமேஷன் துறை தலைவர் கிஷோர்குமார் பேசினார்.வழிகாட்டி கருத்தரங்கில் மேலும் அவர் பேசியதாவது:அனைத்து துறைகளிலும், அனிமேஷன் பங்களிப்பு பரந்து விரிந்துள்ளது. குறிப்பாக, இ-லேர்னிங் முறையில், புரியாத பாடங்களை படங்கள், வீடியோக்களாக உருவாக்கி விளக்குதல், மருத்துவ துறையில் உள் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிதல், மார்க்கெட்டிங் துறையில் புதிய உற்பத்தி பொருளை விளம்பரப்படுத்துதல், விளையாட்டுகளை உருவாக்குதல், சினிமா துறை என பல இடங்களில் அனிமேஷன் பங்களிப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.நன்றாக வரையும் திறன், தனித்துவமாக சிந்திக்கும் ஆற்றல், தொழில்நுட்பத்தை கற்று கொள்ள விரும்புவோர் இத்துறையில் சாதிக்கலாம்.ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன், விஷூவல் கம்யூனிகேஷன், அனிமேஷன் போன்ற மீடியா படிப்புகளை, பல கல்லுாரிகள் வழங்குகின்றன.இத்துறைகளை தேர்வு செய்யும் முன்பு, குறிப்பிட்ட படிப்பு, பல்கலையால் அங்கீகரிக்கப்பட்டதா, ஆய்வக வசதிகள் இருக்கிறதா, தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில் சிலபஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.குரோமா ஸ்டுடியோ இல்லாத கல்லுாரிகளை தேர்வு செய்தால், படிக்கும் போது பயிற்சி பெற முடியாது. இதோடு, 3டி, மாயா, ஆப்டர் எபெக்ட்ஸ் போன்ற தனித்திறன் படிப்புகளிலும், கூடுதலாக கவனம் செலுத்தினால், கல்லுாரி முடித்ததும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.இவ்வாறு, அவர் பேசினார்.