கைத்தறி கண்காட்சி துவங்கியது ரூ.3 கோடிக்கு விற்பனை இலக்கு
கோவை: மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி கோவையில் நேற்று துவங்கியது; 2024, ஜன., 11 வரை நடைபெறுகிறது.தமிழக கைத்தறி மற்றும் மத்திய அரசின் ஜவுளித்துறை, கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து, மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை, கோவை-அவிநாசி ரோடு மீனாட்சி ஹாலில் நடத்துகின்றன. கலெக்டர் கிராந்தி குமார் நேற்று துவக்கி வைத்து, பார்வையிட்டார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.மொத்தம், 80 அரங்குகள் அமைக்கப்பட்டு, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஜவுளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்புகளில் காஞ்சிபுரம், திருப்புவனம், ஆரணி பட்டுச்சேலைகள், சிறுமுகை மென்பட்டுச்சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், மதுரை சுங்கடி காட்டன் சேலைகள், சேலம் வெண்பட்டு வேஷ்டிகள் இடம்பெற்றுள்ளன.மேலும் நீலகிரி தோடர் எம்ப்ராய்டரி சால்வைகள் மற்றும் மப்ளர்கள், சென்னிமலை போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள், கரூர் மேட்கள் மற்றும் துண்டுகள், கடலுார் லுங்கிகள் என தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட அரிய வகை கைத்தறி ஜவுளிகள் ஒரே இடத்தில் விற்கப்படுகின்றன.தமிழக அரசின், 30 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கண்காட்சி, 2024, ஜன., 11ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடைபெறும். இங்கு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி ஜவுளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.