உள்ளூர் செய்திகள்

கவுன்சிலிங் கலந்தாய்விற்கு தயாராகுங்கள்

பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்து படிக்க விரும்புவது இன்ஜினியரிங் படிப்பு தான். நுழைவுத்தேர்வு ரத்து, அதிகளவிலான இன்ஜினியரிங் இடங்கள், கட்டணச் சலுகை, தகுதி மதிப்பெண் குறைவு மற்றும் அதிகளவிலான வேலைவாய்ப்பு ஆகியவையே இதற்கு காரணம். இன்ஜினியரிங் படிப்புகளுக்கு தற்போது கவுன்சிலிங் மூலம் அட்மிஷன் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்களது "கட்ஆப்' மதிப்பெண்கள் அடிப்படையில் தங்களுக்கு கிடைக்கும் கல்லூரியை தேர்வு செய்யலாம். சென்ற ஆண்டு "கட்ஆப்' மதிப்பெண்களை விட, இந்தாண்டு ஒன்று முதல் இரண்டு மதிப்பெண் வரை கூடுதலாக இருக்கும் என ஏற்கனவே அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. "கட்ஆப்' க்கு ஏற்ற கல்லூரி மாணவர்கள் தங்களுடைய கட்ஆப் மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை அறிய www.annauniv.edu/tnea2011/  என்ற இணையதளத்துக்கு சென்று "2010 Cut off'  என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளின் சென்ற ஆண்டு "கட்ஆப்' மதிப்பெண் விவரம் தரப்பட்டுள்ளது. மாவட்டம், படிப்பு, பல்கலைக்கழகம் ஆகியவை வாரியாக கல்லூரிகளின் "கட்ஆப்' மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களின் "ஸ்டேட்டஸ்' பற்றியும் தெரிந்து கொள்ளலாம். எது சிறந்த கல்லூரி உதாரணமாக உங்கள் "கட்ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்ற ஒரு கல்லூரியை நீங்கள் தேர்வு செய்த பின், அந்த கல்லூரியின் உள்கட்டமைப்பு, லேப் வசதிகள், கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்புகளுக்கு அது எந்த விதத்தில் உதவும் போன்றவற்றை ஆலோசித்து செயல்பட வேண்டும். இதனை நீங்கள் அந்த கல்லூரியின் இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் அல்லது கல்லூரிக்கே நேரடியாகச் சென்று அங்கு படிக்கும் சீனியர் மாணவர்களிடம் கேட்டு தகவல்களை பெறலாம். அது மட்டுமல்லாமல் அந்த கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்பதையும், ஐ.எஸ்.ஓ., போன்ற தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். கல்லூரிக்கு 75 சதவீதமும், படிப்புக்கு 25 சதவீதம் முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்ய வேண்டும். காரணம் என்ன படிக்கிறோம் என்பதை விட எங்கு படிக்கிறோம், எப்படி படிக்கிறோம் என்பதே மிக முக்கியம். நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் 200க்கு 180 மதிப்பெண் எடுத்தால் முன்னணி சுயநிதிக் கல்லூரிகளில் எளிதில் இடம் கிடைத்துவிடும். 190க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அரசு கல்லூரியிலே சேர்ந்து விடலாம். இன்ஜினியரிங் இடங்கள் அதிகரித்துள்ளதால் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் உறுதி. எந்த கல்லூரி என்பதில் தான் மாணவர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. கவுன்சிலிங்குக்கு செல்வதற்கு முன்பே, நாம் தேர்வு செய்ய வேண்டிய கல்லூரி குறித்தும், படிப்பு குறித்தும் திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும். எனெனில் கவுன்சிலிங்கில் கல்லூரி மற்றும் படிப்பை தேர்வு செய்த பிறகு அதை மாற்ற முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்