தினமலரின் அன்புடன் அதிகாரி
தேனி: கடந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் 4586 மாணவர்களுக்கு ரூ.2.27 கோடியும், கிராம பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் 3573 பேருக்கு ரூ.22.85 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நல அலுவலர் இந்துமதி தெரிவித்தார்.அவர் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் பணி பற்றி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மை மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை இம் மக்களுக்கு கொண்டு சேர்த்தல். துறையின் கீழ் உள்ள விடுதிகளில் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், கண்காணித்தல், நலத்திட்டங்களுக்கு பயனாளிகளை தேர்வு செய்து அரசின் கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்களின் கல்வியை ஊக்குவிக்குத்தல், விலையில்லா தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, சீர்மரபினர் நல வாரிய உதவிகள், இஸ்லாமியர்கள் , கிறிஸ்துவர்கள் புனித பயணத்திற்கு நிதி உதவி உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுப்பது இத் துறையின் நோக்கம்.துறையின் கீழ் செயல்படும் விடுதிகள் எத்தனை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் 19, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் 5, சீர் மரபினர் விடுதிகள் 4, சிறுபான்மையினர் விடுதி 1. இதில் மாணவிகள் விடுதி 11, மாணவர்கள் விடுதி 18பள்ளி என மொத்தம் 29 விடுதிகள் உள்ளன. கல்லுாரிகளைச் சேர்ந்த 1438 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.இவ்விடுதிகளில் சேர என்ன செய்வது பள்ளி விடுதிகளில் 4வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கல்லுாரி விடுதிகளில் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கப்படுவர். விடுதிகளில் சேர்வதற்கு விடுதி காப்பாளரை அணுகினால் போதும். மாணவர்களின் வீடு, கல்வி நிறுவனத்திற்கு இடைப்பட்ட துாரம் 8 கிலோ மிட்டர் தொலைவில் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது. அனைத்து விடுதிகளிலும் மாதம் ஒருமுறை ஆய்வு செய்கிறோம். குறையிருந்தால் தெரிவிக்கவும் மாணவர்களிடம் தெரிவிக்கிறோம்.மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பற்றி அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் இப் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2022-2023ம் ஆண்டில் கல்வி உதவித்தொகையாக 4586 மாணவர்களுக்கு ரூ.2கோடியே 27 லட்சத்து 22ஆயிரத்து 367 வழங்கப்பட்டுள்ளது.கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிக்கும் திட்டத்தில் 3ம்வகுப்பு முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.500, 6ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டில் 3573 மாணவிகளுக்கு ரூ.22லட்சத்து 85 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சிறுபான்மையின மாணவர்கள் 1295 பேருக்கு மதிப்பெண், கல்விக்கட்டணம் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.வேறு கடன் உதவி திட்டங்கள் உள்ளதா பிற்படுத்தப்பட்டோர், மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் தனிநபர், குழுகடன், கல்வி, கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.உரிய ஆவணங்கள் செலுத்தி கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுக்கொள்ளலாம். கடன் தொகை 25ஆயிரம், 50ஆயிரம் எனில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஜாமின் கையெழுத்திட வேண்டும். ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும் போது இரு மடங்கு சொத்து அடமான ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு டாப்செட்கோ கடன் திட்டத்தில் 248 பேருக்கு ரூ.1கோடியே 22லட்சத்து 48 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது.இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறதா நிலமற்ற, வீடு இல்லாத ஏழை பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 527 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.புனித பயணத்திற்கு நிதி உதவி பற்றி இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செல்லவும்,கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல குடும்பத்தில் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் வழங்கப்படும். சர்ச் புணரமைப்பு பணிக்கு ரூ. ஒரு லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது.உலமாக்களுக்கான திட்டங்கள் பற்றி மாநில வக்பு வாரியத்தில் பதிவு செய்து இயங்கி வரும் வக்பு நிறுவன உலமா பணியாளர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25ஆயிரம், அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மிதி வண்டி வழங்கும் திட்டத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள உலமாக்கள் 224 பேருக்கு ரூ.11.59 லட்சம் செலவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி வழங்கப்படுகிறதா பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 20 முதல் 45 வயதுடைய பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இது வரை 50 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த சலவை தொழில் செய்பவர்களுக்கு இலவச சலவைப்பெட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை ரூ.2.43லட்சம் செலவில் 50 பேருக்கு சலவைப்பெட்டி வழங்கப்பட்டுள்ளது.நலத்திட்டங்கள் பெற யாரை அணுக வேண்டும்நலத்திட்டங்களில் விண்ணப்பிக்க பொதுமக்கள் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றார்.