நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள, சமய சன்மார்க்க சங்கத்தின் நூலகத்தில் இருந்து, நூற்றாண்டை கடந்த, 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகள் சென்னையில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தற்போது, 34 லட்சம் ரூபாய் செலவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில், அழிந்து வரும் பழம்பெரும் தமிழ் புத்தகங்களை பாதுகாத்து, அவற்றை, கணினிமயமாக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அழிந்து வரும் தமிழ் புத்தகங்களை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தேடி வருகிறது. தகவல் இந்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த, புதுப்பாளையம் கிராமத்தில், சமய சன்மார்க்க சங்கத்தில் உள்ள நூலகத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன் அச்சான புத்தகங்கள், பாதுகாப்பாக உள்ளதாக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜயராகவன் தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் சிலர், நேற்று காலை, சமய சன்மார்க்க சங்கத்தின் நூலகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, 18 மற்றும் 19ம் நூற்றாண்டில் அச்சான ஏராளமான புத்தகங்கள் அங்கு உள்ளது தெரியவந்தது. திருப்பெருந்துறை புராணம், ஆனந்தபோதினி, திராவிட பிரகாசிகை போன்ற அழியும் நிலையில் இருந்த, 172 தமிழ் புத்தகங்கள் அவற்றில் இருந்தன. இந்த புத்தகங்கள் விரைவில் கணினிமயமாக்கப்படும் என, உலக தமிழராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜயராகவன் தெரிவித்தார்.