4 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லை; 11 மாணவிகளுக்கு 7 ஆசிரியர்கள் பணியாற்றும் அவலம்
திருநெல்வேலி: தாய் சேய் நலத்தில் முக்கிய பங்காற்றும் கிராமப்புற சுகாதார செவிலியர்களின் நியமனம் நான்கு ஆண்டுகளாக நடைபெறவில்லை.தமிழகத்தில் 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 463 நகர சுகாதார மையங்கள், 8,700 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. கர்ப்பிணிகள் பராமரிப்பு, பாலூட்டும் தாய்மார்களின் நலன், குழந்தைகள் நோய் தடுப்பு உள்ளிட்ட பணிகளில் கிராம சுகாதார செவிலியர்களின் பங்கு முக்கியமானது.இந்தப் பணிக்காக அரசு சார்பில் சென்னை, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 இடங்களில் ஏ.என்.எம். செவிலியர் பயிற்சி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 120 பேர் பயிற்சி பெற்றனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மாநிலம் முழுவதும் 3,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. சில வட்டாரங்களில் ஒரே ஒரு செவிலியர் கூட இல்லை. ஆனால் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஏ.என்.எம். செவிலியர்கள் பணி நியமனம் இல்லாமல் தவிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பயிற்சி முடித்த 2,400 பேர் இன்னும் பணி நியமனம் செய்யப்படவில்லை. அரசு வழங்கிய பயிற்சியே வீணாகிவிட்டது. இதனால் இந்த பயிற்சி வரவேற்பிழந்துள்ளது.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது முதலாம் ஆண்டில் பயிற்சி பெற ஒரு மாணவி கூட இல்லை. இரண்டாம் ஆண்டில் 11 பேர் உள்ளனர். இவர்களுக்காக 6 பயிற்றுநர்களும் ஒரு முதல்வரும் உள்ளனர்.இது குறித்து அரசு அலுவலர் ஒன்றிய திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாரியப்பன் கூறும்போது, யாரோ ஒருவர் வழக்கு தொடர்ந்ததை காரணமாக காட்டி, கடந்த நான்கு ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர் நியமனங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து கிராம மக்களின் அடிப்படை சுகாதார நலத்தையே அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வந்த செவிலியர் பயிற்சிக்கு தி.மு.க., அரசு மூடு விழா நடத்துகிறது என்றார்.கிராமப்புற செவிலியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், அமைச்சர் சுப்பிரமணியன் எப்போது கேட்டாலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இதோ முடிந்துவிடும் என நான்காண்டுகளாக காலம் கடத்தி வருகிறார். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. முடித்தவர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளனர். கிராம சுகாதாரத்தில் முன்னணி மாநிலமாக இருந்த தமிழகம், இனி, தாய் சேய் பராமரிப்பின்மை, பிரசவத்தின்போது குழந்தை இறப்பு, குழந்தைகள் நோய் என மருத்துவத்தில் பின்தங்கிய மாநிலமாக மாறலாம், என்றார்.