உள்ளூர் செய்திகள்

எச்1பி விசா, கிரீன் கார்டு நடைமுறைகளை மாற்றும் அமெரிக்கா; இந்தியர்கள் பாதிக்க வாய்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவருக்கான எச்1பி விசா வழங்கும் நடைமுறை மற்றும் 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தரமாக தங்கும் உரிமை போன்றவற்றில், அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி பெரிய அளவில் மாற்றங்கள் செய்யும் பணி நடந்து வருகிறது என, அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்றது முதல், வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருவோருக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார்.விசா பெறுவதில் உள்ள சிக்கலான விஷயங்களில் உதவுவதற்காக, அமெரிக்க அரசால் நடத்தப்பட்ட குடியுரிமை மற்றும் புலம் பெயர்ந்தோர் சேவைகள் துறையையும் மூடினார்.இந்நிலையில், விசா மற்றும் கிரீன் கார்டு திட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:தற்போதைய எச்1பி விசா வழங்கும் நடைமுறை மோசடியான ஒன்று. அது, அமெரிக்க வேலை வாய்ப்புகளில் வெளிநாட்டு பணியாளர்களை நிரப்ப அனுமதிக்கிறது. அமெரிக்க தொழில் நிறுவனங்களின் முதல் முன்னுரிமை, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக இருக்க வேண்டும்; அதற்கான நேரம் வந்து விட்டது.எனவே, எச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு திட்டத்தை மாற்றுவதில் ஈடுபட்டுள்ளோம். அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 63 லட்சம் ரூபாயும், கிரீன் கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் 55 லட்சம் ரூபாயும் சம்பாதிக்கின்றனர்.தற்போதைய கிரீன் கார்டு முறை, உயர் திறமையானவர்கள் அல்லது அதிக வருமானம் ஈட்டுபவர்களை தேர்ந்தெடுப்ப தற்கு பதிலாக, குறைந்த வருமானம் உள்ளவர்களை அனுமதிக்கிறது. அவர்களை ஏன் இங்கு அனுமதிக்க வேண்டும்? இதனால், அமெரிக்கர் களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது.இதை அதிபர் டிரம்ப் மாற்ற விரும்புகிறார். அதற்காக அவர், 'கோல்டு கார்டு' முறையை பரிந்துரைத்துள்ளார். இது, உயர் திறமை அல்லது அதிக வருமானம் உள்ளவர்களை மட்டுமே அமெரிக்கா வர அனுமதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் எச்1பி விசாவில், 70 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகின்றனர். எனவே, டிரம்பின் நிர்வாகத்தின் மாற்றத்தால், இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.ஜப்பானிலும் மாற்றம் கிழக்காசிய நாடான ஜப்பானின், 'மேனேஜர் விசா' வெளிநாட்டவர்கள் தொழில் துவங்க, நிர்வகிக்க அல்லது முதலீடு செய்ய அனுமதி வழங்குகிறது. இதுவரை இந்த விசா பெற, 30 லட்சம் ரூபாயை ஜப்பானில் முதலீடு செய்தால் போதும். தற்போது அந்த முதலீட்டு தொகையை 1.77 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இந்த புதிய விதி, அக்டோபரில் அமலுக்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்