உள்ளூர் செய்திகள்

ஆயுஷ் மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்புங்கள் படித்து முடித்து காத்திருப்போர் எதிர்பார்ப்பு

மதுரை : அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் காலியாக உள்ள 'ஆயுஷ்' திட்ட மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆயுஷ் திட்டத்தின் கீழ் ஆயுர்வேதா, யுனானி, யோகா நேச்சுரோபதி, சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ சிகிச்சைக்கான மருந்தாளுனர் டிப்ளமோ படிப்புகள் சென்னை, திருநெல்வேலியில் உள்ள சித்த மருத்துவக் கல்லுாரிகளில் கற்றுத்தரப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் ஆண்டுக்கு 200 பேர் வீதம் இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுனர் (இன்டகிரேடட் பார்மசிஸ்ட்) டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கப்படுகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பெரும்பாலான சித்த மருத்துவப் பிரிவுகளில், மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு மருந்தாளுனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.சித்த மருத்துவப் பிரிவு களில் உள்ள டாக்டர்களுக்கான பணியிடங்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யும் அடுத்த நிலையில் உள்ள மருந்தாளுனர்கள் நியமிக்கப்படவில்லை. மருந்து வழங்குவது, சிகிச்சை அளிப்பது, பள்ளிகள் உட்பட வெளியிடங்களில் முகாம் நடக்கும் போது டாக்டர்களுக்கு உதவுவதற்கென மருந்தாளுனர்களின் பணி முக்கியமானது.தமிழகத்தில் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன. மருந்தாளுனர்கள் நிரப்பப்படாததால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் டாக்டர்களே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். 2012 க்கு பிறகு டிப்ளமோ முடித்த 2500 பேர், தற்போது வரை வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.மாதந்தோறும் சராசரியாக 5 முதல் 7 பேர் பணி ஓய்வு பெற்று செல்லும் நிலையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் தாமதமின்றி எம்.ஆர்.பி., மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்