ரூ.4,000 உதவித்தொகை தமிழறிஞர்களுக்கு அழைப்பு
சென்னை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும், மூத்த தமிழறிஞர்களுக்கான, 4,000 ரூபாய் உதவித்தொகையை பெற தகுதியுடையோர், இந்த மாதத்துக்கள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ்ப்பணி ஆற்றிய, 58 வயதான தமிழறிஞர்களுக்கு, மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவப்படி என, 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர் இறந்த பின், மரபுரிமையாளர்களுக்கு, மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவப்படி என, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஜனவரியில், 58வயது நிறைவடைந்த தமிழறிஞர்கள், உதவித்தொகையை பெற, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகம் மற்றும் துறை இணையதளம் வாயிலாக பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தமிழ்ப்பணி ஆற்றிய விபரக்குறிப்பு, தமிழறிஞரின் பரிந்துரை கடிதத்தையும் இணைத்து, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.