| ADDED : ஏப் 15, 2024 01:41 AM
விழுப்புரம் லோக்சபா தொகுதியில், விழுப்புரம் விக்கிரவாண்டி, வானுார், திண்டிவனம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை என 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதேபோல் மயிலம், செஞ்சி சட்டசபை தொகுதிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ளது.விழுப்புரம் லோக்சபா தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியும், அ.தி.மு.க., விற்கு மாஜி அமைச்சர் சண்முகமும் உள்ளனர்.மயிலம், செஞ்சி தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் மஸ்தான் உள்ளார். இந்த இரண்டு தொகுதிக்கும் அ.தி.மு.க., சார்பில் மாஜி அமைச்சர் சண்முகம் உள்ளார்.வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் வரும் 17ம் தேதி முடிவடைய உள்ளது. ஓட்டுப்பதிவு நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ளது.இந்த சூழ்நிலையில் பிரபல அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாலும், தேர்தலில் எந்த கட்சி வாக்காளர்களுக்கு எந்த அளவில் கவனிப்பு நடத்தும் என்ற பொது மக்களிடையே பட்டிமன்றமே நடந்து வருகிறது.தற்போதுள்ள சூழ்நிலையில் ஆளும் தரப்பும், பிரதான எதிர்கட்சி தரப்பும் கவனிப்பு பணியை மேற்கொள்ள தயாராகி வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அல்வா கொடுத்து வாக்காளர் கவனிப்புக்கு 'சாக்லேட்' என 'கோட்வேர்ட்' வைத்துள்ளனர்.ஆளும் தரப்பு 300 சாக்லேட்டும், எதிர்தரப்பு 200 சாக்லேட் கொடுக்கப் போவதாக சம்மந்தப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர்.இதேபோல் ஆரணி தொகுதியை சேர்ந்த 2 தொகுதிக்கும் பிரதான கட்சி சார்பில் 500 சாக்லேட் கொடுக்கப் போவதாக பேச்சு நிலவுகிறது.கவனிப்பு நடத்துவதற்காக பூத் வாரியாக லிஸ்ட் எடுத்து, யார் யாருக்கு கவனிப்பு நடத்துவது என முடிவு செய்து, கவரில் 'சாக்லேட்' போட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர். எப்போது கொடுப்பார்கள் என்பது சஸ்பென்சாக வைத்துள்ளனர்.பலர் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் எப்போது கவனிப்பு நடக்கும் என வெளிப்படையாக கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கவனிப்பு நடத்த இரு கட்சிகளும் தயாராகிவிட்ட நிலையில், மற்றொரு பிரதான கட்சி என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருகிறது. எப்படி இருந்தாலும் அரசியல் கட்சியினரின் கவனிப்பை எதிர்பார்க்காமல் நல்லவரை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் முன்வரவேண்டும்-நமது நிருபர்-.