கேரளா மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரைவைகோ போன் வாயிலாக பேசியதாக வெளியான தகவலை அடுத்து, அவர் மீது தி.மு.க., தரப்பு சந்தேகம் கொண்டுள்ளது.அழுது புலம்பல்
இது குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: திருச்சியில், தி.மு.க., கூட்டணியில் சுயேச்சை சின்னமான தீப்பெட்டியில் துரைவைகோ போட்டியிட்டார். 'என் உயிரே போனாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன்' என, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் துரை வைகோ அழுது புலம்பினார். கூட்டணி தர்மத்தை மதித்து துரை வைகோவிற்கு எந்த குறையும் இல்லாமல் தி.மு.க.,வினர் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். திருச்சியில் துரை வைகோ வெற்றி பெறுவார் என உளவுத்துறை தகவல், தி.மு.க., தலைமைக்குச் சென்றுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்த கையோடு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கேரள மாநிலத்தில் போட்டியிடும் சொந்தக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.நட்பு ரீதியில்
அப்போது, அண்ணாமலையுடன் போனில் துரை வைகோ பேசியுள்ள தகவல் வெளியாகி, தி.மு.க., தரப்பை சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. திருச்சியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட துரை வைகோ மறுத்தது, அண்ணாமலையுடனான தற்போதைய போன் பேச்சு தகவல் இரண்டையும் முடிச்சிட்டுப் பார்த்தே தி.மு.க., தரப்பு சந்தேகம் கொண்டுள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.''தி.மு.க., கூட்டணிக்கு எதிரான அரசியல்வாதியாக அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், நட்பின் அடிப்படையில் தன்னுடன் பேச வரும் யாரையும் மறுக்க மாட்டார். அந்த வகையில், அண்ணாமலை, துரை வைகோவிடம் பேசியிருக்கக்கூடும்'' என அண்ணாமலை ஆதரவு வட்டாரம் தெரிவிக்கிறது.-நமது நிருபர்-