உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பசுமையை அழிக்கும் அரசாணை: மறு பரிசீலனை அவசியம்

பசுமையை அழிக்கும் அரசாணை: மறு பரிசீலனை அவசியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நகர ஊரமைப்பு துறை சட்டத்தில், பொது ஒதுக்கீட்டு இடம் என்ற கருத்துரு உருவாக்கப்பட்டதே, நகரங்களில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான்.நகர ஊரமைப்பு சட்டத்தின்படியும், 1992 ஆக., 20ல் போடப்பட்ட அரசாணை, 222ன் படியும், 2,500 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பிலான அனைத்து லே - அவுட்களிலும், மொத்த பரப்பில் 10 சதவீத இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்க வேண்டுமென்பது கட்டாயம். கடந்த, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் இது மாற்றப்பட்டது.அதன்படி, 3,000 சதுர மீட்டருக்கு உட்பட்ட லே - அவுட்களுக்கு, திறந்தவெளி இடம் ஒதுக்க வேண்டியதில்லை. அதற்கு மேல், 10,000 சதுர மீட்டர் வரையுள்ள லே - அவுட்களில், 10 சதவீதம் இடம் ஒதுக்கலாம் அல்லது அதற்குரிய வழிகாட்டி மதிப்பை அரசுக்கு செலுத்தினால் போதும்.இந்த விதிமுறைக்கு, சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினர். தி.மு.க.,வும் இதற்காக குரல் கொடுத்தது. ஆனால், விதிமுறை மாற்றப்படவில்லை.இதனால், தமிழகம் முழுதும் புதிதாக அமைக்கப்பட்ட பல லே - அவுட்களில் வழிகாட்டி மதிப்பை செலுத்தி விட்டு, பொது ஒதுக்கீட்டு இடத்தையும் 'பிளாட்' போட்டு விற்பது அதிகரித்தது. கடந்த 2019ல் இருந்து, 2021ல் ஆட்சி மாறும் வரை, 138 ஏக்கர் இடத்துக்கு பதிலாக, 61 கோடி ரூபாய் அரசால் வசூலிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தான் இப்படி நிலத்துக்கு பதிலாக, வழிகாட்டி மதிப்பை செலுத்துவது அதிகளவில் நடந்தது. மாநிலம் முழுதும் பல ஆயிரம் லே - அவுட்கள் மற்றும் குடியிருப்புகளில், பூங்கா, விளையாட்டு மைதானங்களுக்குரிய இடங்கள் விற்கப்பட்டன. ஆட்சி மாறிய பின், இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.நாட்டிலேயே சுற்றுச்சூழலுக்காக தனி அணியை உருவாக்கிய கட்சி என்று மார் தட்டிய தி.மு.க., ஆட்சியிலும், இந்த விதிமுறை திரும்ப பெறப்படவில்லை. மூன்று ஆண்டுகளில், இன்னும் பல நுாறு ஏக்கர் இடங்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அரசால் பணம் பெறப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களின் மதிப்பு, பல நுாறு கோடி ரூபாய் இருக்கும்.கோவை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில், வழிகாட்டி மதிப்புக்கும், சந்தை மதிப்புக்கும், மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. அரசுக்கு செலுத்தும் தொகையை விட, பல மடங்கு அதிக விலைக்கே இடங்கள் விற்கப்படுகின்றன.லே - அவுட்கள் மற்றும் கட்டடங்களில், திறந்தவெளியிடம் ஒதுக்க வேண்டாமென்ற இந்த அரசாணையை தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாறாக, அங்கீகாரமற்ற லே - அவுட்களை வரன்முறைப்படுத்தும் போது, 10 சதவீத இடங்களை திறந்த வெளியிடமாக தருவதிலும் விலக்கு அளித்து வழிகாட்டி மதிப்பை செலுத்த புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.தேர்தலுக்கு முன்பாக, மார்ச் 16ல் அவசர கதியில் இந்த அரசாணையை தி.மு.க., அரசு வெளியிட்டது. பசுமையை அழித்து பணம் பண்ணுவதில் அ.தி.மு.க.,வை தி.மு.க., வழிமொழிவது அப்பட்டமாக தெரிகிறது.வெயிலுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின், கொல்லும் கோடை வெப்பத்தை குறைக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பூங்காக்களை உருவாக்க, திறந்தவெளி நிலம் விவகாரத்தில் இத்தகைய விதிமுறைகளை மாற்ற உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ