சென்னை: சென்னை புறநகரில், மது விற்பனை வெகுஜோராக நடக்கிறது. மளிகைக்கடை, பெட்டிக்கடை, 'வாட்டர் ஷாப்' உள்ளிட்ட இடங்களில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது.செங்குன்றம் அடுத்த, பம்மதுகுளம் ஊராட்சி, பொத்துார் பிரதான சாலை, புதிய ஈஸ்வரன் நகரில் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள மளிகைக்கடையில், சர்வ சாதாரணமாக மதுபானங்கள், 24 மணி நேரமும் கிடைக்கிறது.டாஸ்மாக் கடை மதுக்கூடம் போல், நீல வண்ணத்தில் மின்னும் வீட்டுடன், இணைந்த கம்பி வலை தடுப்பு அமைக்கப்பட்ட மளிகை கடையில், பீர் உள்ளிட்ட மதுபானங்கள் கிடைக்கின்றன.அந்த கடையின் பின்பக்கம் உள்ள மரத்தடியில், 'குடி'மகன்கள் மது அருந்த, திறந்தவெளி இடம் உள்ளது. குவார்ட்டர் பாட்டிலுக்கு, டாஸ்மாக் கடையைவிட 50 ரூபாயும், பீருக்கு 80 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளருக்கு குளிர்ந்த குடிநீர் பாட்டில், சலுகை விலையில் 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.அங்கிருந்து, 3 கிலோ மீட்டர் துாரத்தில், சரத்கண்டிகை என்ற கிராமத்தில், மூதாட்டி ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். தற்போது, அவரது மகன் விற்பனை செய்து வருகிறார்.அவர், வாடிக்கையாளரின் அழைப்பை ஏற்று, அவர்கள் இருக்கும் இடத்தில் மதுபாட்டில்களை வினியோகம் செய்கிறார். மேலும், லட்சுமிபுரம் ஏரிக்கரை அருகிலும், மொபைல் சர்வீஸ் மூலம், மது விற்பனை நடக்கிறது.அதேபோல், ஆவடி அருகே காட்டூர் மகளிர் தொழிற்பேட்டை, அயப்பாக்கம், சோழவரம், மணலி, மீஞ்சூர் மணலி புதுநகர், மாதவரம் பால்பண்ணை, திருவேற்காடு உள்ளிட்ட, காவல் நிலைய எல்லைகளில் பெட்டி கடை, குளிர்பான கடை, மளிகை கடை மற்றும் மொபைல் 'வாட்ஸாப்' சர்வீஸ் வாயிலாக, மதுபாட்டில்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.மதுபோதையில் வாகனம் ஓட்டி, போலீசாரிடம் சிக்காமல், இருக்கும் இடத்திலேயே மதுபானம் கிடைப்பதால், 'குடி'மகன்கள் கூடுதல் விலை பற்றி கவலைப்படாமல், வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து, செங்குன்றம் மது விலக்கு போலீசாருக்கு தெரிந்திருந்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அவர்களின் 'ஆசி' காரணமாக, கள்ளச்சந்தையில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், ஆங்காங்கே மதுபோதை மோதல்களும் தொடர்கின்றன. அதனால், வீடு, வாகனங்கள் சேதமடைவதாலும், அப்பாவிகள் தாக்கப்படுவதாலும், பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.செங்குன்றம் மதுவிலக்கு போலீசார், கள்ளச்சந்தை வியாபாரிகளிடம் தங்களுக்கு வேண்டியதை, 'கறாராக' வசூலித்து விடுகின்றனர். பிரச்னை வராமல் இருக்க, அந்தந்த பகுதி சட்டம் - ஒழுங்கு போலீசாரிடம் 'கூட்டணி' வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆலோசனை கூட்டம்
கள்ளச்சந்தை மது விற்பனை குறித்து, மதுக்கூட உரிமையாளர்கள் கேள்வி எழுப்பாமல் இருக்க, மணலி, மீஞ்சூரில் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. மீஞ்சூரில், அந்த பகுதியைச் சேர்ந்த 'மாஜி' தி.மு.க., அமைச்சர் ஒருவரின் திருமண மண்டபத்தில், செங்குன்றம் மதுவிலக்கு போலீசார் ரகசிய கூட்டம் நடத்தினர். அதில், அவர்களது காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள, 50 மதுக்கூட உரிமையாளர்கள் பங்கேற்றனர். அவர்களிடம், தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால், நீங்கள் சரக்கு விற்றாலும், விற்காவிட்டாலும், தங்களுக்கு வழக்கமாகக்கொடுக்க வேண்டியதை, பாக்கி வைக்காமல் கொடுக்க வேண்டும் என, போலீசார் உத்தரவிட்டது சர்ச்சையாகி இருக்கிறது.
போலி மது விற்பனை
கட்டுமான தொழில், இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி, பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இந்த பகுதிகளில் குட்கா, பான்பராக் பொருட்களை பல மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதில், வாசனைக்காக சிறிதளவு மதுவை கலந்து, 'குவார்ட்டர்' பாட்டிலாக தயாரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. அவர்களும், போதை ஏறவில்லை என, ஒன்றுக்கு இரண்டு பாட்டில்களாக வாங்கி பயன்படுத்தி, ரகளையில் ஈடுபடுகின்றனர்.