உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேர்தல் முடிவுகளுக்கு பின் கோடநாடு வழக்கு வேகமெடுக்கும்! விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

தேர்தல் முடிவுகளுக்கு பின் கோடநாடு வழக்கு வேகமெடுக்கும்! விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், லோக்சபா தேர்தலுக்குப் பின் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட்டில், அவர் மறைந்த பின்பு, 2017 ஏப்.,24ல் கொள்ளை நடந்தது. சம்பவத்தின்போது, அங்கிருந்த காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான, ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ், அடுத்த சில நாட்களில் சேலம் அருகே விபத்தில் பலியானார்.மற்றொரு குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர், கேரளாவில் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். அவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ், இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின் தற்கொலை செய்து கொண்டார்.இந்த மர்ம மரணங்களின் பின்னணியில், அதிகாரம் வாய்ந்த அரசியல்கட்சியினர் இருப்பதாக புகார் எழுந்தது. எஸ்டேட் பங்களாவில் இருந்த சொத்து ஆவணங்கள் மற்றும் பணத்தைக் கைப்பற்றவே, அந்த கொள்ளை நடந்ததாகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்சி அதிகாரத்திலுள்ள முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும், குற்றவாளிகள் சிலர் பகிரங்கமாக பேட்டியளித்தனர்.ஆனால் அது தொடர்பாக எந்தவிதமான ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை. சம்பவம் நடந்தபின், நான்கு ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சி இருந்தபோதே இவ்வழக்கும், சாதாரண கொலை, கொள்ளை வழக்காக முடிக்கப்பட்டுவிட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், வழக்கு மீண்டும் துாசி தட்டப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.,வசம் ஒப்படைக்கப்பட்டு, 230க்கும் அதிகமானோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளில் கனகராஜைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதன் பின்னணியில் கேரளாவைச் சேர்ந்த அ.தி.மு.க.,மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன் இருப்பதாக, எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவரும் விசாரிக்கப்பட்டார்.சம்பவம் நடந்தபோது, அவர் துபாயில் இருந்ததால், தனக்குத் தொடர்பில்லை என்று மறுத்து விட்டார்.கடந்த மாதத்தில், சருகுமான், காட்டுமாடு வேட்டையாடப்பட்டதற்கான ஆதாரங்களுடன், அவருக்குச் சொந்தமான எஸ்டேட்டில் சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, வனத்துறை மற்றும் போலீசார் பதிவு செய்த வழக்குகளிலும் அவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இப்போதும் அவர் துபாய்க்குச் சென்று விட்டதால், அவரைக் கைது செய்ய முடியவில்லை.இந்த வழக்கில் அவரைக் கைது செய்திருந்தால், கோடநாடு வழக்கு தொடர்பான சில உண்மை விபரங்கள் மற்றும் ஆதாரங்களைக் கைப்பற்றி விடலாம் என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்டது பற்றி, சஜீவனுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து, அவர் தப்புவதற்கு போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவி செய்ததாக புகார் கிளம்பியது.இந்நிலையில், வேட்டை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சிலரிடமிருந்தும், சமீபத்தில் கைதான யூடியூபர் மீதான வழக்கு விசாரணையிலிருந்தும், கோடநாடு சம்பவம் தொடர்பான சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக, போலீஸ் வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. குறிப்பாக, டிரைவர் கனகராஜ் விபத்து தொடர்பான, புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.இந்த ஆதாரங்கள், இவ்வழக்கில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. இதை வைத்து, லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், வழக்கு விசாரணையை வேகப்படுத்தவும், அதிரடியாக சிலரைக் கைது செய்யவும், போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் அரங்கிலும் பெரும் அதிர்வலைகள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.-நமது சிறப்பு நிருபர்--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
மே 25, 2024 19:02

அதற்கு முன்பு... பழனி திமுகவில் சேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை.


ஆரூர் ரங்
மே 25, 2024 10:24

ஒண்ணும் நடக்காது. இருபத்தொன்றாம் பக்க பங்காளிகளுக்குள் நிரந்தர ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அதிமுக பிஜெபி யுடன் கூட்டணியைத் தவிர்த்தது .


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ