சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 47 பேர் இறந்துள்ளதற்கு, மெத்தனால் கலந்த சாராயம் குடித்தது தான் காரணமாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.கள்ளச்சாராயம் அருந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, கண் பார்வை இழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் நச்சுப் பொருளான மெத்தனாலின் தீவிரத்தைத் தடுக்கும், 'போமெபிசோல்' மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். தற்போது, இது அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை; தனியார் மருந்தகங்களிலும், கையிருப்பில் இல்லை.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: மெத்தனால் விஷமுறிவுக்கு, 'போமெபிசோல்' மருந்து தீர்வாக இருந்தாலும், அதன் தரம் உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் உள்ளது. இந்தியாவில் 5 லட்சத்துக்கு குறைவாக பயன்படுத்தப்படும் மருந்துகள், 'அர்பன் ட்ரக்' என்ற பட்டியலில் சேர்க்கப்படுகிறது. அந்த மருந்துகள், தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாது. விலங்குகள் மற்றும் குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு, நேரடியாகவே பயன்படுத்தப்படும். அதனால், பக்க விளைவுகள் ஏற்பட்டால் மட்டுமே, அம்மருந்துகளை தடை செய்வர். எனவேதான், மெத்தனால் முறிவுக்கு, அரசு மருத்துவமனைகளில் எத்தனால் தான் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உறுப்பு சேதத்தை இதன் வாயிலாக தடுக்கலாம். இந்த எத்தனால், மற்ற பாதிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுவதால், அதன் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 'போமெபிசோல்' மருந்து கொள்முதல் செய்யப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, எத்தனால் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.