அரசு நிர்ணயித்ததை விட, கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக, கோவையில் முதல் முறையாக, தனியார் டவுன் பஸ்சின் பர்மிட் ஒரு வாரம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளது; ஆனால் அரசு பஸ்களில் இன்னும் இந்த கட்டண முறைகேடு தொடர்கிறது.அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அரசு டவுன்பஸ்கள் மற்றும் மொபசல் பஸ்களில், சொகுசு பஸ், பாயிண்ட் டூ பாயிண்ட், பை பாஸ் ரைடர் என புதுப்புதுப் பெயர்கள் வைத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறைகேடு, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போதே துவங்கிவிட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இதற்கு முடிவு கட்டுவதற்குப் பதிலாக, முறைகேடும், கட்டணமும் இன்னும் அதிகமாகி விட்டது. இதுதொடர்பாக, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, ஐகோர்ட்டில் பொதுநல மனு (WP 31514/2019) தாக்கல் செய்தது. அதில் கடந்த பிப்.,23ல் முக்கிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பஸ்களில் இந்த முறைகேடு இடைவிடாமல் தொடர்வதால், அபராதம் விதிப்பது போதாது; பஸ்களின் பர்மிட்டை ரத்து அல்லது சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் மீது, ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டருக்கு, இந்த அமைப்பின் செயலர் கதிர்மதியோன் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில், கலெக்டரும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.உக்கடம்-காந்திபுரம் இடையே இயக்கப்படும் தனியார் டவுன்பஸ்சில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக இரண்டு ரூபாய் வசூலித்ததற்காக, ஒரு வாரத்துக்கு பர்மிட்டை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த முறைகேடு தொடர்ந்து வரும் நிலையில், அதிகக் கட்டணம் வாங்கிய ஒரு பஸ்சின் பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.ஆனால், அரசு பஸ்களில் தான் இந்த முறைகேடு அதிகளவில் நடந்து வருகிறது. ஒரு புறத்தில் பெண்களுக்கு, இலவச பஸ் என்று அறிவித்து விட்டு, சாதாரண பஸ்களை பெருமளவில் குறைத்துள்ள தமிழக அரசு, வேறு பஸ்களில் அதே பெண்கள் உட்பட அனைவரிடமும் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம், இதுபற்றி எந்த புகார் கூறினாலும் கண்டு கொள்வதில்லை.உதாரணமாக, கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, கோவில்பாளையத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.19 மட்டுமே. ஆனால் அரசு பஸ்களில் நிறத்துக்கேற்ப அல்லது பெயருக்கேற்ப, ரூ.22, ரூ.25, ரூ.28, ரூ.30 என இஷ்டம் போலக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த செந்தில்குமார், ஐந்து நாட்களில், ஐந்து அரசு பஸ்களில் ஐந்து வித கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.இந்து ஐந்து டிக்கெட்களையும் இணைத்து, கூடுதல் கட்டணம் வாங்குவதற்கான காரணமென்ன என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு போக்குவரத்துக்கழகத்தின் கோவை கிளை அதிகாரிக்கு மனு அனுப்பியிருந்தார். அதற்கு, ஆத்துப்பாலம் பாலம் வேலையால், 3 கி.மீ., பஸ்கள் சுற்றி வந்ததால், கூடுதல் கட்டணம் பெறப்பட்டது என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்போது ஆத்துப்பாலம் வழித்தடத்தில் பஸ்கள் அனுமதிக்கப்படுவதால், கடந்த மே 27லிருந்து, பஸ்களின் வகைக்கேற்ப பயணக்கட்டணம் வசூலிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் பதில் தரப்பட்டுள்ளது. இதிலிருந்தே, வெவ்வேறு கட்டணம் வாங்குவது மறைமுகமாக நியாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அரசு பஸ்களில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் உறுதியாகியுள்ளது.தனியார் பஸ் மீது கலெக்டர் எடுத்த அதே நடவடிக்கையை, அதிகக் கட்டணம் வாங்கும் அரசு பஸ்கள் மீதும் எடுப்பதே நியாயம்!
'ரூட்' மாறலாம்; 'ரேட்' மாறக்கூடாது!
கடந்த 2020ல், இதேபோன்ற புகார் எழுந்தபோது, அப்போதிருந்த கலெக்டர் ஹரிஹரன், 'மோட்டார் வாகனச் சட்டம் விதி 66(3)ன் படி, பாலம் கட்டுதல், சாலை சீரமைப்புக்காக, வேறு வழித்தடத்தில் வாகனம் இயக்கப்பட்டாலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது; இதுபற்றி ஆர்.டி.ஓ.,க்கள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று உத்தரவிட்டிருந்தார்.ஆனால் கோவை நகரில் இப்போது வெவ்வேறு பகுதிகளில் பாலங்கள் கட்டும் வேலை காரணமாக, பஸ்கள் சுற்றி வருவதைக் காரணம் காட்டி, கூடுதல் கட்டணம் வசூலிப்பதும், பாலம் வேலை முடிந்தாலும் அதைத் தொடர்வதும் வாடிக்கையாகிவிட்டது.-நமது நிருபர்-