சரிந்து வரும் அ.தி.மு.க., செல்வாக்கை மேம்படுத்தவும், தி.மு.க., ஓட்டு வங்கியை சிதைக்கவும், நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கைகோர்த்து வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என்ற, இரண்டாம் கட்ட தலைவர்களின் ஆலோசனையை, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2021 சட்டசபை தேர்தலை, அ.தி.மு.க., வலுவான கூட்டணியுடன் எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.அதன்பின், உள்ளாட்சி தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் என, தொடர்ந்து தி.மு.க., கூட்டணியிடம் அ.தி.மு.க., தோல்வி கண்டு வருகிறது. டிபாசிட் இழப்புசமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தி.மு.க., கூட்டணியிடம் தோல்வி கண்டது மட்டுமின்றி, பல இடங்களில் மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது; சில இடங்களில், 'டிபாசிட்'டும் இழந்தது.இதனால், கட்சியின் எதிர்காலம் என்னவாகுமோ என கவலை அடைந்த நிர்வாகிகள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள், பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால், அவர்களை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று, பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இருப்பினும், கட்சியின் நலன் கருதி, அவர்கள் தெரிவித்த சில ஆலோசனைகள், பழனிசாமியை யோசிக்க வைத்துள்ளன.இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க.,வானது, சில தேர்தல்களாக கூட்டணி பலத்தால் வெற்றி பெற்று வருகிறது. அதிகபட்சமாக, 53 சதவீதம்; குறைந்தபட்சமாக, 46 சதவீத ஓட்டுகளை அக்கூட்டணி பெற்றுள்ளது. தி.மு.க., கூட்டணியை வெல்ல வேண்டும் என்றால், அக்கூட்டணியின் ஓட்டு சதவீதத்தை குறைக்க வேண்டும் அல்லது அக்கூட்டணி ஓட்டு சதவீதத்தை, அ.தி.மு.க., கடந்து செல்ல வேண்டும். தற்போது, இதற்கான வாய்ப்பு இல்லை. தி.மு.க.,வை எதிர்த்து தமிழகத்தில் வலுவான கூட்டணி இல்லை. அ.தி.மு.க., - பா.ஜ., தலைமையில் இரு கூட்டணியோடு, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதனால், தி.மு.க., கூட்டணி எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்துள்ளன. தி.மு.க., கூட்டணியை வெல்ல வேண்டும் என்றால், எதிர்ப்பு ஓட்டுகள் ஒன்றுபட வேண்டும்.நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டு, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்குமானால், மீண்டும் தி.மு.க., கூட்டணியே வெற்றி பெறும். ஒருவேளை, அக்கட்சி அ.தி.மு.க., ஓட்டுகளை பிரித்தால், அதுவும் அ.தி.மு.க.,வுக்கு பலவீனமே.புள்ளி விபரம்அதனால், எப்படியாவது தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, 'அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுடன், பா.ம.க.,வையும் இடம்பெற வைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., தலைவர்கள், பொதுச்செயலர் பழனிசாமியிடம் புள்ளி விபரங்களுடன் எடுத்து கூறியுள்ளனர். 'எனக்கு நம்பிக்கை இல்லை; இருந்தாலும், அப்படியொரு கூட்டணி அமைக்க முயற்சிக்கலாம்; பேசிப் பாருங்கள்' என, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு, பழனிசாமி பச்சைக்கொடி காட்டி உள்ளார்.இதையடுத்து, அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் சிலர், நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களோடு பேச்சு நடத்த துவங்கியுள்ளனர். இதில் முன்னேற்றம் ஏற்பட்டால், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை, இதே இலக்கில் கொண்டு செல்லவும் பழனிசாமி சம்மதித்துள்ளார்.இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின- நமது நிருபர் -.