சங்க காலத்திலேயே கோவில்கள் கட்டிய தமிழர்கள்: தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி தகவல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: “சங்க காலத்திலேயே தமிழகத்தில் கோவில் கட்டப்பட்டு உள்ளதற்கான சான்றுகள், மாமல்லபுரம் மற்றும் கும்பகோணத்தில் கிடைத்துள்ளன,” என, தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி பேசினார்.சென்னை சி.பி.ஆர்., இந்தியவியல் ஆய்வு மையம் சார்பில், 'கோவில் கட்டடக்கலை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.இதில், கோவில் கட்டட கலையின் கூறுகள் என்ற தலைப்பில், தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி, ஆகமங்களில் கோவில் கட்டடக்கலை என்ற தலைப்பில், விவேகானந்தா கல்லுாரி சமஸ்கிருத பேராசிரியர் முத்து ஆகியோர் பேசினர்.பரிணாமம்தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி பேசியதாவது:நாட்டில் வடமாநிலங்களில் முதலில் கோவில்களுக்கான கட்டுமானங்கள் எழுந்தன. முதலில் வெட்டவெளியில் வைக்கப்பட்ட லிங்கம், அதற்கு நான்கு கால்கள் நிறுத்திய கூரை என்ற அளவில், கற்களால் கட்டப்பட்டன.அவை மெல்ல மெல்ல பரிணாமம் அடைந்து, பல்வேறு நிலைகளை அடைந்தன. தென்மாநிலங்களில் கர்நாடகாவை ஆண்ட கடம்பர்கள், கோவில் கட்டட கலையின் முன்னோடியாக உள்ளனர்.அவர்களை தொடர்ந்து, பல்லவர்களின் கட்டட கலை, தமிழகத்தின் கோவில் கட்டட கலையின் துவக்க நிலையாக அமைந்தது.அவர்கள், பல்வேறு கோவில் கட்டட கலை மாதிரிகளை விளக்கும் வகையில், மாமல்லபுரத்தில் வடிவமைத்து, அவற்றை பெருங்கோவில் கட்டுமானங்களில் அமல்படுத்தினர்.அவர்கள் நீள்சதுரம், அரை வட்டம், வட்டம் உள்ளிட்ட வடிவங்களில், கலையம்சம் பொருந்திய படைப்புகளாக வடிவமைத்தனர். அவர்களைத் தொடர்ந்து, சோழர்களும், பாண்டியர்களும் கோவில் கட்டட கலையில் சிறந்து விளங்கினர்.வடமாநில கோவில்களை விட, தென் மாநில கோவில்கள் சிறப்பு பெற்றவையாகவும், தனித்தன்மை மிக்கதாகவும் அமைந்தன. அதிலும், தமிழகத்தில் கட்டப்படும் கோவில்கள் தனித்த அடையாளம் கொண்டவையாக இருந்தன.மிகக்குறைந்த அடித்தளம், உள்கூடுடன் கூடிய இரட்டைச் சுவர்கள், சதுரத்தில் இருந்து வட்டம் எனும் வித்தியாசமான முயற்சிகளை, தமிழர்களே செய்து பார்த்துள்ளனர். தமிழர்களின் கோவில் கட்டுமான கலை மிக நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும், தனித்துவமாகவும் உள்ளது.அதிலும், எந்த பசையையும் பயன்படுத்தாமல், கற்களை மட்டுமே அடுக்கி, மிக உறுதியான கோவிலை கட்டியதற்கு சான்றாக உள்ளது தஞ்சை பெரிய கோவில்.அந்த கோவில், வெயில், இடி, மின்னல், மழை, வெள்ளம் என, பல்வேறு இயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக நிற்கிறது.இதை பின்பற்றி, கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவில், மிக அழகாக கட்டப்பட்டு உள்ளது. அதில் உள்ள சிலைகள் மிக நேர்த்தியாக உள்ளன.இந்த மாதிரியான கோவில்களில், துாண்கள், கூரைகள், சுவர்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர்படுத்தி, மொத்த கோவிலையும் அழகாக்கலாம்.சிறப்பு வாய்ந்தது
ஆனால், வடமாநில கோவில்களில் அவ்வாறு செய்ய முடியாது. அதேபோல, நார்த்தமலையில் உள்ள விஜயாலயசோழீஸ்வரம் எனும் கோவில் மிக சிறப்பு வாய்ந்தது.பொதுவாக சங்க காலத்தில் கோவில் கட்டுமானங்கள் இல்லை என்று பலர் கூறுவர்; அது தவறு. மாமல்லபுரம் கடலோரத்தில், 2005ல் முருகன் கோவிலை அகழாய்வு செய்தோம்.தற்போது, கும்பகோணம் அருகில் உள்ள வேப்பத்துாரில் வீற்றிருந்த பெருமாள் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து வருகிறோம்.அதன் அடித்தளம் சங்க கால செங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. அதில் பல்லவர், சோழ மன்னர்களால் செப்பனிடப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.