உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவைக்கான அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வருமா? விரைந்து நிறைவேற்ற எதிர்பார்ப்பு

கோவைக்கான அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வருமா? விரைந்து நிறைவேற்ற எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், கோவைக்கென சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைத்தல், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க மண்டல அலுவலகம் உருவாக்குதல் ஆகிய, இரு அறிவிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் 2026 சட்டசபை தேர்தலுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.2021 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோற்றதால், கோவையை தி.மு.க., அரசு புறக்கணித்து வருவதாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.அ.தி.மு.க., அரசு துவக்கிய திட்டங்களை, மூன்றாண்டுகளாக செயல்படுத்தி வருவதாக, ஒவ்வொரு கூட்டத்திலும் அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டாகியும், கோவைக்கென சிறப்பு திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, சட்டசபை கூட்டத் தொடரில், சில சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த திட்டங்களில் சில

ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்தின் மண்டல அலுவலகம் கோவையில் அமைக்கப்படும், வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்படும். அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுக்கு சிலை நிறுவப்படும், செயற்கை நுண்ணறிவு எந்திரவியல் ஆய்வகம் உருவாக்கப்படும், கோவை அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்...இப்படி சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, 2026க்குள், தி.மு.க., அரசால் நிறைவேற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இவை மட்டுமின்றி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக, நுாற்றாண்டு நினைவு நுாலகம் கட்டப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மத்திய சிறை மைதானத்தில், 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது; இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. நிலத்தை ஒப்படைப்பதற்கான நிபந்தனைகளை தளர்வு செய்து, விமான நிலைய விரிவாக்கத்துக்கு முனைப்பு காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.இவற்றை இரு ஆண்டுகளுக்குள் செய்து முடித்தால், தி.மு.க., அரசு மீது கோவை மக்களுக்கு நம்பிக்கை வரும் என்பது உறுதி.

அறிவிச்சது என்னாச்சு?

கோவையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கிறதா என நான்கு வழித்தடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் செயல்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இன்னும் முடிவெடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண, மக்கும் குப்பையில் இருந்து 'பயோ காஸ்' மற்றும் மின்னுற்பத்தி செய்யும் திட்டத்தை, நகராட்சித்துறை அமைச்சர் நேரு, அறிவித்து பல ஆண்டுகளாகி விட்டது; இன்று வரை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போதைய சட்டசபை கூட்டத் தொடரிலும் நேரு மீண்டும் அறிவித்திருக்கிறார்.ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், மின்சார பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கோவையில் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்திருந்தார். இன்னும் பஸ்கள் வந்தடையவில்லை. தற்போதைய சட்டசபை கூட்டத்திலும் அமைச்சர் மீண்டும் அறிவித்திருக்கிறார்.ரூ.144.80 கோடி ஒதுக்கி, கோவையில் ஐந்து இணைப்பு சாலை ஏற்படுத்தும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, இரு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது; அரசாணைக்காக, மாநகராட்சி காத்திருக்கிறது. இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.கோவை மத்திய சிறையை, பிளீச்சிக்கு இடம் மாற்றுவதற்கு உள்துறை செயலர் ஏற்கனவே ஆய்வு செய்து விட்டார். நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. நிதியாதாரத்தை காரணம் காட்டி, இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்