உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லோக்சபா தேர்தலில் போட்டியா? தடுமாறும் மல்லிகார்ஜுன கார்கே

லோக்சபா தேர்தலில் போட்டியா? தடுமாறும் மல்லிகார்ஜுன கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் இருந்து போட்டியிடலாமா என்பதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 82, இரு மனதுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். கடந்த 1972 முதல், 2008 வரை, கர்நாடகாவின் குர்மித்கால் சட்ட சபை தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்; 2009 முதல் 2019 வரை, குல்பர்கா லோக்சபா எம்.பி.,யாக இருந்தார்.

விருப்பம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால், இவர், லோக்சபாவில் கட்சியின் தலைவராக இருந்தார்; 2019 தேர்தலில் தோல்வியடைந்ததால், ராஜ்யசபா எம்.பி.,யானார். தற்போது ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.கட்சித் தலைமையை அவர் ஏற்றுள்ள நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி வரும் நிலையில் அதை தடுக்கவும், கட்சியை ஒற்றுமைப்படுத்தவும், தொண்டர்களை ஊக்குவிக்கவும், அவர் போட்டியிட வேண்டும் என்று பல மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 28 தொகுதிகள் உள்ள கர்நாடகாவில் அவர் போட்டியிட்டால், கட்சிக்கு 20 இடங்கள் கிடைக்கும் என்றும் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். இது, தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், கட்சிக்கு வலு சேர்க்கும் என்ற கருத்தும் உள்ளது.அதே நேரத்தில், நாடு முழுதும் பிரசாரம் செய்வது, அதற்கு முன், கூட்டணி அமைப்பது, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒருங்கிணைப்பது என, பல பணிகள் இருப்பதால், தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற யோசனையில் கார்கே உள்ளதாகக் கூறப்படுகிறது.கர்நாடகாவில் இதுவரை ஏழு தொகுதிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அடுத்த பட்டியல் வெளியிடுவதற்கு முன், இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருமகன்

கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே தற்போது குல்பர்கா லோக்சபா தொகுதிக்குட்பட்ட சிட்டபுர் சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ., வாக உள்ளார். மேலும், முதல்வர் சித்தராமையா அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளார். அதனால், கார்கே போட்டியிடாவிட்டால், அவருடைய மருமகனும், பிரபல தொழிலதிபருமான ராதாகிருஷ்ண தொட்டமானி, குல்பர்கா தொகுதியில் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ