வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புது வியாபாரம் ஆரம்பம் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தனியுரிமை படுத்தினால் பிரச்சினை குறையும்
மேட்டுப்பாளையம் : குரங்கம்மை தொற்று பரவலை தடுக்கும் விதமாக, ஊராட்சிகள், நகர் பகுதிகளிலில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், 'அலர்ட்' செய்யப்பட்டு, அறிகுறிகளுடன் வருபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.'எம்பாக்ஸ்' எனப்படும், குரங்கம்மை தொற்று ஆப்ரிக்க நாடுகளில் பரவி வந்த நிலையில், தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. நமது நாட்டில் இதன் பாதிப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குரங்கம்மை தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள, 227 ஊராட்சிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள நகர் பகுதிகளில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குரங்கம்மை தொற்று அறிகுறியுடன் யாரேனும் வந்தால், அவர்களுடைய ரத்த மாதிரியை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள், உடன் உள்ளவர்கள், அவர்களுடன் பழகியவர்கள் என, அனைவரின் தகவலும் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு குரங்கம்மை அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'நம் மக்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் சென்று வரக்கூடிய சிங்கப்பூரில், குரங்கம்மை வேகமாக பரவி வருகிறது. இதனால் கோவையில் உள்ள அனைத்து ஊராட்சிகள், அதனையொட்டி உள்ள நகர் பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க அந்தந்த சுதாரத்துறை குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்ப கால அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் தாமாக மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. மருத்துவரை உடனே அணுக வேண்டும்' என்றனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜன் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்படும். இதற்காக ஆண்கள், பெண்கள் வார்டுகளில் தலா நான்கு படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்,'' என்றார்.
புது வியாபாரம் ஆரம்பம் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தனியுரிமை படுத்தினால் பிரச்சினை குறையும்