மேலும் செய்திகள்
அணுசக்தி துறை: அச்ச உணர்வை அகற்றுமா ஷாந்தி மசோதா?
22 hour(s) ago | 1
புதுடில்லி: பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை சேர்க்கும் பணியில், அல் குவைதா அமைப்பு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த துவங்கியுள்ளது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள், 'டிஜிட்டல்' முறையில் மூளைச்சலவை என பயங்கரவாதத்திற்கு ஆள்பிடிக்க, அல் குவைதா புதிய பாணியை கையாள துவங்கி உள்ளது. குறிப்பாக, நம் நாட்டில் அனைவர் கைகளிலும் புழங்கும், ஸ்மார்ட் போன், இளைஞர்கள் வளம், வெளிப்படையான, 'ஆன்லைன்' பயன்பாடு ஆகியவை அல் குவைதாவுக்கு சாதகமாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டை அருகே, நவ., 10ம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 15 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், ஹரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சமூகத்தில் மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், எப்படி பயங்கரவாதிகளாக மாறினர் என விசாரணை அதிகாரிகள் கவலை அடைந்தனர். துருப்புச்சீட்டு
இந்நிலையில், இச்சம்பவம் நடப்பதற்கு முன்பாக கடந்த அக்டோபர் மாதம் மஹாராஷ்டிராவின் புனேவில் மென்பொறியாளர் ஜூபைர் இலியாஸ் ஹங்கர்கேகர், 35, என்பவர் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத அமைப்பான அல் குவைதாவுடன் இவர் தொடர்பில் இருந்ததால், 'உபா' எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்புப் படையினர் இவரை கைது செய்தனர். ஜூபைரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் டில்லி செங்கோட்டையில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் ஆகியவை, விசாரணை அமைப்புகளுக்கு ஒரு புதிய தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதுவரை பாமர இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அவர்களை பயங்கரவாத பாதைக்கு திருப்பி வந்த பயங்கரவாத அமைப்புகள், தற்போது சந்தேகத்துக்கு ஆளாகாத நபர்களை தங்களது சதித் திட்டங்களை அரங்கேற்றுவதற்கு தயார்படுத்தி வரும் புதிய தகவல் தெரிய வந்துள்ளது. நம் நாட்டில் இளைஞர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். அவர்களிடம் இணையசேவை கொண்ட ஸ்மார்ட் போன்களும் இருக்கின்றன. இது தான், அல் குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் துருப்புச் சீட்டாக மாறி இருக்கிறது. பயங்கரவாத சதித் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள, இந்த நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அல் குவைதா வளர்ந்து இருக்கிறது. அதாவது, டிஜிட்டல் வாயிலாகவே பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது. எல்லை கடந்து அழைத்துச் சென்று துப்பாக்கி பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக, இருக்கும் இடத்தில் இருந்தே, இணையதளம் வாயிலாக இளைஞர்கள் மனதில் பயங்கரவாத விதையை துாவி, அதை மரமாக வளர்க்கும் நீண்ட கால திட்டத்துடன் அல் குவைதா களமிறங்கி இருக்கிறது. புனேவில் கைதான ஜூபைரிடம் விசாரணை நடத்தியபோது, 'டெலிகிராம்' போன்ற சமூக ஊடகங்கள் மூலம், பயங்கரவாதத்தை பரப்பும் தடை செய்யப்பட்ட புத்தகங்களை அவர்கள் அதிக அளவில் தரவிறக்கம் செய்தது தெரிந்தது. தவிர, அதை படித்து, பயங்கரவாதியாக மாறிய அவர், தன் தொடர்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கும் வலைவிரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்சேர்ப்பு
மென்பொறியாளர் என்பதால், இதற்காக பிரத்யேக மென்பொருளை அவரே உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளார். தவிர, வெளிநாட்டு ஐ.பி., முகவரி வழியாக பயங்கரவாத கருத்துகளையும் அவர் பரப்பி வந்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, சமூகத்தில் எளிதில் சந்தேகத்துக்கு ஆளாகாத நபர்களை பயங்கரவாதிகளாக மாற்ற அல்குவைதா முடிவு செய்து இருப்பது உறுதியாகிஉள்ளது. அதுவும், உடனடி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அல்லாமல், நீண்ட கால திட்டங்களுக்காக ஆட்சேர்ப்பு பாணியை இப்படி மாற்றிக் கொண்ட அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
மெல்ல கொல்லும் விஷம் போல, சமூகத்தில் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்களை சத்தம் இல்லாமல் உருவாக்குவது தான் அல் குவைதாவின் நீண்டகால திட்டம் என உளவுத்துறை எச்சரிக்கிறது. இதற்காக ஆன்லைன் வாயிலாக மறைமுகமாக ஆட்களை சேர்க்கும் பணியில் அல் குவைதா களமிறங்கி இருக்கிறது. குறிப்பாக சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவது தான் முக்கிய குறியாக இருக்கிறது.
22 hour(s) ago | 1