தேர்தல் ஆணையர் அருண் கோயல், தமது பதவியை ராஜினாமா செய்திருப்பது திடீர் பேசுபொருளாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் ராஜிவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராகவும், அனுப் சந்திர பாண்டேவும், அருண் கோயலும் தேர்தல் ஆணையர்களாகவும் இருந்தனர். இதில், வயது மூப்பு காரணமாக, கடந்த பிப்., மாதத்தில் அனுப் சந்திர பாண்டே, ஓய்வுபெற்றார். அருண் கோயல் நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். வரும் 2027 வரை, இவருக்கு பதவிக்காலம் இருந்தது. ராஜிவ் குமாருக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் இருந்தது.இந்நிலையில், இவர் ராஜினாமா செய்தது அரசியல் கட்சியினரையும் பொதுமக்களையும் புருவம் உயர்த்த வைத்து உள்ளது.அடுக்குகின்றனர்இதற்கான காரணங்களைத் தேர்தல் ஆணையமோ, மத்திய அரசோ, அருண் கோயலோ இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், அரசியல் தரப்பினர், பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர்.அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திரங்கள் வழக்கில், எஸ்.பி.ஐ., வங்கி, விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கு இன்னும் கால அவகாசம் கேட்டு உள்ளது.அந்த விபரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்தவுடன், அதை, அவர்களுடைய வலைதளத்தில் பதிவேற்றியாக வேண்டும்.இதை மேன்மேலும் தாமதப்படுத்த வேண்டிய தேவை, ஆளும் மத்திய அரசுக்கு இருப்பதாகவும், அதற்கு ஏதுவாக இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தவுமே, அருண் கோயல் பதவி விலக வைக்கப்பட்டிருப்பதாக ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள குறைகள் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள அத்தனை சந்தேகங்களையும் சமாளிக்க, மத்திய அரசுக்கு சாதகமான தேர்தல் ஆணையர் தேவைப்படுகிறார். அதற்கு வசதியாகவே தேர்தல் ஆணையர் இடங்களில் வெற்றிடம் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது இன்னொரு தரப்பு.சமீபத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மேற்கு வங்கத்திற்கு சென்றார் அருண் கோயல். மேற்கு வங்கத்தில் தேர்தலைப் பல கட்டங்களாக நடத்தும்படி வலியுறுத்தினார்.ஆனால், முதல்வர் மம்தா அதை ஏற்க மறுத்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உறுதியாகக் கூறி விட்டார். இந்தப் பேச்சு முடிவுறாத நிலையில், பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு அருண் கோயல் டில்லி திரும்பினார். அங்கே தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, விபரங்களைத் தெரிவித்தார்.அதில் ஏற்பட்ட கருத்து மோதலின் தொடர்ச்சியாகவே, அருண் பதவி விலகினார். தமது மேலதிகாரியான ராஜிவ் குமாருக்குக் கூட தெரிவிக்காமல், அவர் ராஜினாமா செய்துவிட்டார் என்று மூன்றாவதாக ஒரு விளக்கம் பரப்பப்பட்டு வருகிறது.ஏற்க மறுப்புஇதற்கு வலுசேர்க்கும் விதமாக, மம்தா பானர்ஜி கட்சியான திரிணமுல் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.பார்லிமென்ட்டில் கேள்வி கேட்க பரிசு பெற்றதாக சர்ச்சையில் சிக்கி எம்.பி. பதவியை இழந்த மஹூவா மொய்த்ரா, 'தேர்தல் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அருண் கோயல் ஏன் திடீரென்று கிளம்பிப் போனார்? எத்தனை கட்டங்களாக மேற்கு வங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதிலும், கூடுதல் படைகளை களமிறக்க வேண்டும் என்பதிலும் டில்லி விதித்த உத்தரவுகளை ஏற்க மறுத்ததே இதற்குக் காரணம்.இப்போது, அவரது இடத்தில் 'ஆமாம் சாமி' போடும் இன்னொரு நபர் நியமிக்கப்படுவார்' என்று 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.சகரிகா கோஷ் என்ற மற்றொரு திரிணமுல்எம்.பி, தமது 'எக்ஸ்' பதிவில், 'பா.ஜ., என்பது வங்கத்துக்கு எதிரானது. வங்க மக்களுக்கு எதிரானது.அது வெளியாட்கள் மற்றும் ஜமீன்தார்களின் கட்சி. வங்கத்துக்கான நிதி ஆதாரங்கள் தடுக்கப்பட்டு உள்ளன.'எங்களுடைய 'ஜன கர்ஜன்' பேரணிக்கு ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய படைகள் வங்கத்துக்கு மட்டும் அனுப்பப்படுகின்றன. குஜராத்துக்கோ, உ.பி.,க்கோ அனுப்பப்படவில்லை.'இப்போது தேர்தல் நேரத்தில், அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத்தைப் பற்றி இது உலகத்துக்கு என்ன செய்தியைச் சொல்கிறது?' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.உண்மையான காரணம் வெளியே தெரியவரும் வரை, இதுபோன்ற பல விளக்கங்களும், யூகச் செய்திகளும் பரப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.
தேர்தலில் நிற்கிறாரா?
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அருண் கோயல் கூறியுள்ளார். தலைமை தேர்தல் கமிஷனருடன் மோதல், இதற்கு காரணமா அல்லது மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டு உள்ளதா? கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், தன் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் சேர்ந்தார். அதுபோல, அருண் கோயலை, லோக்சபா தேர்தலில் நிறுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளதா என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
15ல் புதிய கமிஷனர்கள்?
தலைமை தேர்தல் கமிஷனில் இரண்டு கமிஷனர்கள் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் இந்த பதவியிடங்கள், புதிதாக கொண்டு வரப்பட்ட தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்தின்படி நிரப்பப்பட உள்ளன. இதன்படி, மத்திய சட்ட அமைச்சர் தலைமையில், இரு செயலர்கள் அடங்கிய தேடல் குழு அமைக்கப்படும். இந்த குழு, தகுதி வாய்ந்த ஐந்து பேரின் பெயர்களை தேர்தல் கமிஷனர் பதவிகளுக்கு பரிந்துரை செய்யும். அவர்களில் தகுதியான நபர்களை பிரதமர் தலைமையிலான குழுநியமிக்கும்.இதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் மத்திய உள்துறை செயலர் மற்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் செயலர் ஆகியோர் அடங்கிய தேடல் குழு, ஒவ்வொரு பதவியிடத்துக்கும் ஐந்து பேர் கொண்ட பெயர்களை பரிந்துரை செய்ய உள்ளது. இவற்றில், புதிய தேர்தல் கமிஷனர்களாக இருவரது பெயரை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கீழ் செயல்படும் மத்திய அமைச்சர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பெயரை, ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிகாரப்பூர்வமாக நியமிப்பார்.இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக்குழு, வரும் 13 அல்லது 14ம் தேதிக்குள் சந்தித்து முடிவெடுக்கும் எனவும், அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களின் பெயரை, ஜனாதிபதி திரவுபதி முர்மு 15ம் தேதிக்குள் நியமிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.- நமது நிருபர் -