கோவை : 'ஏட்டையா... பணத்தை 'கூகுள் பே'வுல அனுப்புங்க' என, மொபைல் போனில் போலீசார் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் நேற்று வைரலாகி, கோவை போலீசாருக்கு நேற்றைய விடியலை அதிர்ச்சிகரமானதாக மாற்றியது. இதைத்தொடர்ந்து, ரைட்டர், உதவி ரைட்டர் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கோவை மாவட்ட காவல் துறையில், 5 சப்-டிவிஷன்கள், 33 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. அந்தந்த ஸ்டேஷன் எல்லைக்குள் நடக்கும் சட்ட விரோத செயல்களுக்கு மாமூல் வசூலித்து, போலீசாருக்குள் பங்கு பிரித்துக் கொள்வது வாடிக்கை.இவ்வகையில், மதுக்கடை பார் நடத்துபவர்கள்; 'எப்எல்2' மதுக்கூடம் நடத்துவோர்; மணல் கடத்துவோர்; குவாரி நடத்துவோர்; கிளப், குடில் நடத்துபவர்கள்; லாட்டரி, கஞ்சா விற்பவர்களிடம் மாதாந்திர மாமூல் நடக்கிறது. வசூல் தொகை ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் மாறுபடும். எஸ்.பி., காவலர்கள்
இதுபோன்ற சட்ட விரோத செயல்கள் மீது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து தகவல் சொல்வதற்காக, எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து நுண்ணறிவு பிரிவு காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், எஸ்.பி., அலுவலக இன்ஸ்பெக்டருக்கு தகவல் அளிப்பர்.இவர் மூலம் எஸ்.பி., கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 'என்கொயரி' செய்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நடைமுறையில், கோவையில் எஸ்.பி., பத்ரிநாராயணன் நியமித்துள்ள தனிப்பிரிவில் அங்கம் வகித்துள்ள நுண்ணறிவு காவலர் ஒருவர், பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ரைட்டர் மற்றும் உதவி ரைட்டர் ஆகியோர் பேசிய உரையாடல், சமூக வலைதளத்தில் நேற்று 'லீக்'கானது. இது, போலீஸ் உயரதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த உரையாடல் இதுதான்!
'ஏட்டைய்யா... ஒன்னும் பிரச்னை இல்லை; எல்லா 'அமவுன்ட்'டையும் உங்க 'அக்கவுன்ட்'டுல போட்டுக்குங்க. எங்களுக்கு 'கூகுள் பே' மட்டும் பண்ணி விடுங்க'.'என்னப்பா... ரைட்டர் அக்கவுன்ட்டை உங்க அக்கவுன்ட்டா மாத்திடுவீங்க போலிருக்கே...''ரைட்டர்னா என்ன... காவல்நிலையம்... ரைட்டர் எல்லாம் ஒன்னுதான்!''சார் வேற சேர்ந்துட்டாரு... அய்யோ... அப்பா...''ரைட்டர் ரொம்ப சந்தோஷமா இருக்காரு; அப்போ, எல்லோருக்கும் போனஸ் வரும்னு நினைக்கிறேன்''எஸ்.பி., ஏட்டையா மனசு வச்சா... எல்லாத்துக்கும் போனஸ் கொடுத்திடலாம்''சிறப்பா செய்வோம்; எல்லாம் எல்லோருக்கும்!' ஆயுதப்படைக்கு மாற்றம்
பேரூர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார், மொபைல்போனில் பேசிக் கொண்ட ஆடியோ குறித்து, உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக, பேரூர் ஸ்டேஷன் எழுத்தர் (ரைட்டர்) முரளிதரன், உதவி எழுத்தர் அஜித்குமார், நுண்ணறிவு பிரிவு காவலர் பரமேஸ்வரன் ஆகியோரை, ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். மீண்டும் வந்து விடுவர்
காவல்துறையில் ஏதேனும் ஒரு போலீசார் தவறு செய்தால், உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றுவது வழக்கம். இது, காவல்துறையில் மிகப்பெரிய நடவடிக்கை போல், வெளிப்புறத்தில் ஜோடிக்கப்படுகிறது.உண்மையில் அப்படியல்ல; ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்துக்குள்ளோ, குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீசார் மீண்டும் பழைய பணிக்கு வந்து விடுவர்; அதே ஸ்டேஷனுக்கோ அல்லது ஏற்கனவே பணியாற்றிய பதவிக்கோ, திரும்பி வந்து வசூலை தொடர்வது வாடிக்கையாகி விட்டது.தவறுகள் செய்யும்போது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக, 'சஸ்பெண்ட்' செய்து, துறை ரீதியான விசாரணையை துவக்க வேண்டும். அவர்களது 'சர்வீஸ் புக்'கில் இதுபோன்ற குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும். முன்மாதிரி நடவடிக்கை
பேரூர் ஸ்டேஷன் உரையாடலில், 'கூகுள் பே'அனுப்பச் சொல்வது; போனஸ் கேட்பது போன்றவை, சட்ட விரோத செயல்களுக்கு, போலீசாரே உடந்தையாக இருப்பதாக சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஒரு ஸ்டேஷனில் ரைட்டரே ஆணி வேர்; அவருக்கு அந்த ஸ்டேஷனில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அத்துபடி. அதனால், ரைட்டர் மற்றும் உதவி ரைட்டர் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசாரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தவறு செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.அந்நடவடிக்கை, தமிழகத்துக்கே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என, காவல்துறையில் உள்ள நேர்மையான போலீசார் விரும்புகின்றனர். நடவடிக்கை உறுதி!
மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரியிடம் கேட்டதற்கு, ''போலீசார் பேசிய ஆடியோ குறித்து விசாரித்து வருகிறோம். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 'என்கொயரி' நடந்து வருகிறது. ''இதில், இன்ஸ்பெக்டர்கள் சம்பந்தப்பட்டு இருந்தாலும், கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.பார்க்கலாமே!
ஏ.டி.எஸ்.பி., விசாரணை துவக்கம்
கோவை எஸ்.பி., பத்ரிநாராயணனிடம் கேட்டதற்கு, ''ஆடியோவில் பேசும் மூன்று நபர்களும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதன் உண்மைத்தன்மை அறிய, ஏ.டி.எஸ்.பி., (தலைமையகம்) தலைமையில் விசாரணை துவக்கியிருக்கிறோம். உண்மை கண்டறியப்பட்டால், கண்டிப்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.டி.எஸ்.பி., அறிக்கைக்கு காத்திருக்கிறோம்,'' என்றார்.