உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கலக்கம்! கட்சி தாவும் காங்கிரஸ் நிர்வாகிகள்: தடுக்க முடியாமல் திணறும் தலைமை

கலக்கம்! கட்சி தாவும் காங்கிரஸ் நிர்வாகிகள்: தடுக்க முடியாமல் திணறும் தலைமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேர்தல் நேரத்தில் தொகுதி கிடைக்காததால், ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் தலைவர்கள் சேருவது அரசியலில் சாதாரணமானது. ஆனால், கொத்து கொத்தாக வெளியேறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.சமீபத்தில் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். கடந்த 2014ல் இருந்து பார்த்தால், காங்கிரசைச் சேர்ந்த அமரீந்தர் சிங் -- பஞ்சாப், குலாம் நபி ஆசாத் - ஜம்மு -- காஷ்மீர், விஜய் பகுகுணா - உத்தரகண்ட், மறைந்த அஜித் ஜோகி - சத்தீஸ்கர், எஸ்.எம்.கிருஷ்ணா - கர்நாடகா, நாராயண ரானே -- மஹாராஷ்டிரா, கிரிதர் கோமங்க் - ஒடிசா என, பல முன்னாள் முதல்வர்கள் காங்கிரசில் இருந்து விலகினர்.

மக்களுக்கு சேவை

இதில், கிரிதர் கோமங்க் மீண்டும் கட்சிக்கு திரும்பியுள்ளார்.இதுபோல, பல முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில அளவிலான பிரதிநிதிகள் என பலரும் காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதில் பெரும்பாலானோர், நேரடியாக பா.ஜ., அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர்.அரசியல் என்பது ஒரு பொதுச்சேவை என்பதெல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது. அதனால், மக்களுக்கு சேவை செய்வதற்காக கட்சி மாறுவதாகக் கூறுவது, ஒரு கூடை பூவை நம் காதில் சுற்றுவதாகவே இருக்கும்.அப்படியென்றால், இவர்கள் கட்சி மாறுவதற்கு காரணங்கள் வேறாகவே இருக்க வேண்டும். அரசியலில் உள்ளவர்கள் பெரும்பாலானோர், ஏதாவது ஒரு தொழிலை நடத்தி வருகின்றனர். அதன் வளர்ச்சி அல்லது பாதுகாக்க, அரசியல் அவர்களுக்கு ஒரு கவசமாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில், பா.ஜ., அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியாத நிலையில் உள்ளது.

சவால்

ஒரு பக்கம், பா.ஜ.,வின் சவால்களை சந்திக்கத் திணறும் அதே நேரத்தில், பல மாநிலங்களில், மாநிலக் கட்சிகளிடம் ஆட்சிகளை தாரை வார்த்துவிட்டு, தற்போது அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தொகுதியை கேட்டு பெறும் நிலையில் காங்கிரஸ் உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி போன்ற அதீத செல்வாக்கு உள்ள தலைவர் இல்லாதது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். இதைத் தவிர, எந்த விஷயத்திலும் சரியான கொள்கை முடிவு இல்லை. சிறுபான்மையினரை ஆதரிக்கும் அதே நேரத்தில், ஹிந்துக்களையும் விடத் தயாராக இல்லை. பா.ஜ.,வைப் போல, எந்த ஒரு விஷயத்திலும் உறுதியான முடிவு எடுப்பதில்லை.இனி கட்சியில் இருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதால், பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அதில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் விசாரணையை சந்திக்கும் தலைவர்கள், அதில் இருந்து தப்பிக்க, ஆளுங்கட்சிக்கு தாவுவதாகவும் கூறப்படுகிறது. இது, காங்கிரஸ் மேலிடத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனி குழு அமைப்பு!

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வருபவர்களை, பா.ஜ., உடனே சேர்த்துக் கொள்வதில்லை. அவர்களுடைய அரசியல் பின்னணி, குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஜாதி கணக்குகள் உள்ளிட்டவை பார்த்தே சேர்க்கப்படுகிறது. இவ்வாறு வருவோர் குறித்த தகவல்களை சேகரித்து, அவர்களை கட்சியில் சேர்க்கலாமா என்று பரிந்துரை செய்வதற்கு, உயர்நிலைக் குழுவை பா.ஜ., அமைத்துள்ளது. தேசிய பொதுச்செயலர்கள் புபேந்திர யாதவ், வினோத் தாவ்டே, பி.எல்.சந்தோஷ், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா உள்ளிட்டோர் இந்தக் குழுவில் உள்ளனர்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை